ஆடி பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு சென்றனர்.

விருதுநகர்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று ஆடி மாத பவுர்ணமியையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் அடிவாரப்பகுதியான தாணிப்பாறை பகுதியில் குவிந்தனர். பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை கேட் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் மலை ஏறி செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு சென்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மற்ற நாட்களை காட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், விபூதி, சந்தனம், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து நடைபெற்ற பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், ராஜபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவாரப்பகுதி, கோவில் வளாக பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் விருதுநகர், மதுரை மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024