ஆடி பவுர்ணமி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ஆடி மாத பவுர்ணமி திதியை முன்னிட்டு நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வரத் தொடங்கினர். கடல் மற்றும் நாழி கிணறு ஆகிய புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை நேரம் நெருங்க, நெருங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசனம் முடித்து இரவு கடற்கரை மணலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் நிலா சோறு சாப்பிட்டு இரவு முழுவதும் அங்கேயே தங்கினர்.

இந்நிலையில், ஆடி பவுர்ணமி மற்றும் ஞாயிறு விடுமுறை தினமான இன்று காலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்துள்ளனர். கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போலீசார் தெப்பக்குளம் அருகிலும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் உள்ளிட்ட 6 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நெல்லை, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

You may also like

© RajTamil Network – 2024