ஆடுகளம் டூ அரசியல் களம்… யுத்தத்தில் வெல்வாரா வினேஷ் போகத்?

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகத்… மல்யுத்தத்தைப் போல அரசியலிலும் வெற்றிவாகை சூடுவாரா?காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகத்... மல்யுத்தத்தைப் போல அரசியலிலும் வெற்றிவாகை சூடுவாரா?

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், ஜுலானா தொகுதியில் அவர் களமிறங்குகிறார்.

ஹரியானா மாநிலத்தில் மல்யுத்தத்திற்குப் புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர் வினேஷ் போகத். காமன்வெல்த் போட்டிகளில் 2014, 2018, 2022 எனத் தொடர்ந்து 3 முறையும், 2018 ஆசியப் போட்டியிலும் தங்கம் வென்ற வினேஷ் போகத், காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார். இப்படி, மல்யுத்தக் களத்தில் வினேஷ் அசத்திக் கொண்டிருந்த நிலையில், வீராங்கனைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகப் புகார் எழுந்ததால் கொந்தளித்தார்.

விளம்பரம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அப்போதைய பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தினர்.

2023-ம் ஆண்டு ஜனவரி மாதம், டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் நடத்திய போராட்டம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்ததுடன், தற்போது வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியாவின் அரசியல் அத்தியாயத்திற்குத் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது.

போராட்டக் களத்தில் இருந்து மீண்டும் ஆடுகளத்திற்குத் திரும்பினாலும், அங்கும் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார் வினேஷ். பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், ஒரு நாள் கூட அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இறுதிப் போட்டியின்போது 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ், பதக்க வாய்ப்பை இழந்தார்.

விளம்பரம்

இதையடுத்து, தாயகம் திரும்பிய வினேஷ் போகத்திற்கு சொந்த மாநிலமான ஹரியானாவில் செல்லும் இடமெல்லாம் மக்கள் குவிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே, கடந்த புதன்கிழமை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை மல்யுத்த நட்சத்திரங்களான வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் சந்தித்த போதே, அவர்களின் அரசியல் வருகை உறுதியானது. இந்நிலையில், ரயில்வே துறையில் சிறப்புப் பணி அதிகாரியாக இருந்த வினேஷ் போகத், தனது வேலையை நேற்று ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து பெற்ற வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் தலைமை அலுவலகத்திற்குச் சென்று முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

விளம்பரம்

பின்னர் பேசிய வினேஷ் போகத், தன்னுடைய சவாலான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி உடன் நின்றதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய பஜ்ரங் புனியா, தங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க பாஜக முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

Also Read :
பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி.. ஹரியானாவில் நடப்பது என்ன?

ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில், ஜூலானா தொகுதியில் வேட்பாளராக வினேஷ் போகத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்

ஆடுகளத்தில் இருந்து அரசியல் களத்திற்குச் சென்றுள்ள வினேஷ் போகத், மல்யுத்தத்தைப் போல, அரசியல் யுத்தத்திலும் வெல்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதனிடையே காங்கிரஸின் அனைத்திந்திய விவசாய பிரிவு செயல் தலைவர் பதவியை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு வழங்கி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டுள்ளார். பஜ்ரங் புனியா காங்கிரஸில் சேர்ந்த சில மணி நேரத்தில் இந்தப் பதவியானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bajrang Punia
,
Congress
,
haryana
,
Vinesh Phogat

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024