Sunday, September 22, 2024

“ஆட்சி அதிகாரத்தில் பங்கு” – கவனம் பெறும் திருமாவளவன் எக்ஸ் தள வீடியோவும், நீக்கமும்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

“ஆட்சி அதிகாரத்தில் பங்கு” – கவனம் பெறும் திருமாவளவன் எக்ஸ் தள வீடியோவும், நீக்கமும்!

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின், எக்ஸ் பக்கத்தில் இன்று (சனிக்கிழமை) காலை, “2016-ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விசிக. இடங்கள் ஒதுக்கீடு அல்ல; அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும் எனக் கேட்டோம்” என அவர் பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று பகிரப்பட்டிருந்தது. பின்னர் சில நிமிடங்களிலேயே அந்த வீடியோவை நீக்கப்பட்டது.

அந்த வீடியோவில், திருமாவளவன் பேசியிருந்ததாவது: நீ எதிர்த்துப் பேசக் கூடாது. போராடக்கூடாது. கல்வியில் உயர்ந்து விடக்கூடாது. உயர்ந்த பதவிக்கு வர ஆசைப்படக்கூடாது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக்கூடாது. தமிழகத்தில் இதற்கு முன்னாடி யாரும் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்தினார்களோ, இல்லையோ, 2016-ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அமைச்சரவை பங்கு வேண்டும். இடங்கள் ஒதுக்கீடு அல்ல, அதிகார பங்கு கேட்டோம்.

அதற்கு முன் இருந்த இயக்கங்கள் எல்லாம் அதுபோல கேட்டார்களா என்பது எனக்கு தெரியாது. அதிகார பங்கு வேறு, இடங்கள் ஒதுக்கீடு வேறு. அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பது அதிகாரப் பங்கு, கூட்டணியில் இடம் வேண்டும் என்பது ‘சீட் ஷேரிங்’. பவர் ஷேரிங் என்பது எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது.

“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்பதுதான் 1999-ல் தேர்தல் அரசியலில் விசிக அடியெடுத்து வைத்தபோது முன்வைத்த முழக்கம். நான் முதன்முதலில் நெய்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது, “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்” இந்த முழக்கத்தைத்தான் நான் முதலில் வைத்தேன்.

அதிகாரம் தனிமனிதனுக்கு அல்ல. மக்களுக்கு, சமூக வாரியாக மக்களுக்கு, இதையெல்லாம் சொல்லுகிற துணிச்சலைப் பெற்ற இயக்கம் விசிக.எங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்த வரலாற்றை எல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சும்மா, சராசரி ஆட்களைப் பேசுவது போல், சமூக ஊடகங்களில் எதையாவது பதிவு செய்யக் கூடாது.” என்று பேசியிருந்தார்.

முன்னதாக, சில மாதங்களுக்கு முன்பு பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்தும், கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசிய திருமாவளவன், “உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது” என்று பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வரும் அக்.2ம் தேதி உளுந்தூர்பேட்டையில், விசிக சார்பில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். மேலும், இந்த மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்திருந்தார். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தபடியே, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததும், தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசும் அவரது பழைய பேச்சு அடங்கிய வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, பின்னர் அதனை உடனடியாக நீக்கியதும் கவனம் பெற்றுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024