ஆண்டுக்கு 2.6 கோடி டன் ஜவுளிக் கழிவுகள்! முதலிடத்தில் சீனா! நிலத்தில் புதைக்கிறது…

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

ஆண்டுக்கு 2.6 கோடி டன் ஜவுளிக் கழிவுகள்! முதலிடத்தில் சீனா! நிலத்தில் புதைக்கிறது…உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட ஜவுளிக் கழிவுகளை ஏற்படுத்துவதிலும் சீனாவே முதலிடத்தில் இருப்பது பற்றி…வென்ஜோ தியான்செங் தொழிற்சாலை குவித்து வைக்கப்பட்டுள்ள ஜவுளிக் கழிவுகள்

மக்கள்தொகையிலும் மின்சார வாகனத் துறையிலும் முக்கியப் பங்கு வகிக்கும் சீனா, பயன்படுத்தப்பட்ட ஜவுளிக் கழிவுகளை அதிகளவில் வெளியேற்றி நிலத்தில் கொட்டுவதிலும் முக்கியப் பங்காற்றுவதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய பிரச்னையாக ஜவுளிக் கழிவுகள்

பயன்படுத்தப்பட்ட துணிகளால் உண்டாகும் கழிவுகள் குறித்த பிரச்னை உலகளவில் விவாதிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. உபயோகப்படுத்திய துணிகளை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் மறுசுழற்சி செய்வதற்கு முன்வருவது இல்லை. `ஒருவர் பயன்படுத்திய ஆடைகளை, தங்களால் பயன்படுத்த முடியாது’ என்று வாடிக்கையாளர்கள் கூறுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருள்களில் வெறும் 12% மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கழிவுகள் மெத்தைகளினுள் அடைப்பதற்கும், கயிறு திரிப்பதற்கும்தான் பயன்படுத்தப்படுகிறது.

சீனாவே முதலிடம்

சர்வதேச தரவுகளின்படி, உலகின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தியாளரும் நுகர்வோருமான சீனாதான், உலகளவில் ஜவுளிக் கழிவுகளை அதிகமாகவும் வெளியேற்றுகின்றனர். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2.6 கோடி டன்களுக்கும் அதிகமான துணிக் கழிவுகளை நிலத்தில் கொட்டுகின்றனர்.

சீனாவில் பெரும்பாலான தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பருத்தி அல்லாத துணிகள் பெரும்பாலும் பெட்ரோலிய ரசாயனங்களிலிருந்து பெறப்படும் செயற்கைப் பொருள்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இந்த ரசாயனங்கள்தான் காற்று மற்றும் நீர் மாசுபாட்டிற்கு முக்கிய பங்களிக்கின்றன.

மேலும், இந்த வகை ஜவுளிகளை மறுசுழற்சி செய்யவும் இயலாது. இருப்பினும், இந்த வேதிப் பொருள்களில் உருவாக்கப்படும் ஜவுளிகளின் விற்பனை, சீனாவின் உள்நாட்டு ஆடை விற்பனையில் 70%-ஆக உள்ளது.

சீனாவின் ஷெய்ன் மற்றும் டெமு ஆகிய இரண்டு ஜவுளி நிறுவனங்கள் தான், விலை குறைவான ஜவுளிகளை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதாவது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜவுளிகளை விற்பனை செய்வதன் மூலம், உலகின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தி நாடாக சீனாவை உருவாக்கியுள்ளன.

சீனாவின் ஜவுளித் துறை குறித்து நிபுணர்கள்

சீனாவின் ஜவுளி உற்பத்தி குறித்து பேஷன் நிபுணர் ஷாவே யே கூறுவதாவது, சீனாவில் உருவாக்கப்படும் ஜவுளிகள் மறுசுழற்சி செய்யக்கூடிய இழைகளிலிருந்து உருவாக்கப்பட வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் ஜவுளிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி, மீண்டும் பயன்படுத்த இயலும் என்று தெரிவிக்கிறார்.

ஆனால், சீனாவில் பருத்தியால் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன; அதாவது, 12% ஜவுளிக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

மனித உரிமைகள் அறக்கட்டளையின் உறுப்பினர் கிளௌடியா பென்னட் கூறுவதாவது, உலகில் பயன்படுத்தப்படும் பருத்தி ஆடைகளில் ஐந்தில் ஒன்று சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும். இந்த பருத்தி ஆடைகள் சீனாவின் சிறுபான்மையினரான உய்குர் மக்களைக் கட்டாயப்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

இதனால்தான் உய்குர் மக்களின் கட்டாய உழைப்பைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்க அரசு கடந்த மே மாதத்தில், சீனாவின் 26 பருத்தி துணி வர்த்தகர்களின் இறக்குமதியை ரத்து செய்தது. இருப்பினும், சீனாவின் பருத்தி ஆடைகள் மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவற்றில் `சீனாவில் உருவாக்கப்பட்டது’ என்ற முத்திரையில்லாமல்தான் இருக்கும் என்று தெரிவிக்கிறார்.

ஜவுளி மறுசுழற்சியில் பின்னடைவான சீனா

மின்சார கார்கள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் பொதுப் போக்குவரத்தில் முன்னணி நாடாக விளங்குவதற்கு முயலும் சீனா, 2060 ஆம் ஆண்டுகளில் கார்பன் அதிகரிப்பில் நடுநிலைத் தன்மையை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது; ஆனால், ஜவுளிகளை மறுசுழற்சி செய்வதில் பின்னே செல்வதாக இருக்கிறது.

சீனாவின் முன்னணி ஜவுளி நிறுவனமான ஷெய்ன் நிறுவனத்தின் சுற்றுச்சூழல், மனித உரிமைகள் மற்றும் சமத்துவ நடைமுறைகள் குறித்து மதிப்பிட்டபோது, அதன் மதிப்பு 6 புள்ளிகள் மட்டுமே பெற்றது; சராசரியாக, 150 புள்ளிகள் பெற்றால்தான் பாதுகாப்பான நிலையில் இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு நிறுவனமான டெமு நிறுவனம் பூஜ்யம் புள்ளியைப் பெற்றது. மேலும் மதிப்பிடப்பட்ட, மற்ற சில நிறுவனங்களில் அமெரிக்காவின் சில்லறை விற்பனையாளர் எவர்லேனின் நிறுவனம் மட்டுமே அதிகபட்சமாக 40 புள்ளிகளைப் பெற்றது.

நுகர்வோர்கள் விரும்புவதில்லை

பயன்படுத்தப்பட்ட பருத்தி ஆடைகளிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்டு, தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு சீன அரசு தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், அசுத்தமான அல்லது அழுக்கான பொருள்களை மறுசுழற்சி செய்யும் செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக தடை விதித்திருக்கலாம் என்று தெரிகிறது.

சீனாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தில், பருத்தி மறுசுழற்சி ஆலைகளில் ஒன்றான வென்ஜோ தியான்செங் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின் ஓர் அறையில் பலதரப்பட்ட ஆடைகள், குறிப்பாக பருத்தி துணிகளை இரண்டு குவியல்களாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிறுவனத்தின் விற்பனை இயக்குநர் கோவன் டாங் தெரிவிப்பதாவது, வாடிக்கையாளர்கள் பழைய ஆடைகளை வாங்குவதற்கு விரும்புவதில்லை; புதிய ஆடைகளை வாங்குவதற்குதான் முன்வருகின்றனர். இருப்பினும், இங்கு பயன்படுத்தப்பட்ட ஆடைகளிலிருந்து இறுக்கமான கயறுகள் உருவாக்கப்பட்டு, ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர்

அடுத்ததாக, முப்பது வயதான ஆடை வடிவமைப்பாளர் டா பாவோ கூறுவதாவது, அண்மைக் காலங்களில் இளம் தலைமுறையினர் இரண்டாம் தரமாகத் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இவரது நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகளை, தைத்து, அவற்றிற்கு மறுவடிவம் தருகின்றனர். அதாவது, இளைஞர்களுக்கு பிடித்தவாறு டிசைன்களாகத் தைக்கப்படுகிறது என்று கூறுகிறார். டா பாவோவும் அவரது உறவினரும் 2019 ஆம் ஆண்டில் `டைம்ஸ் ரீமேக்’ என்ற ஆடை வடிவமைப்பகத்தை நிறுவி, செயல்படுத்தி வருகின்றனர்.

மற்றோர் ஆடை வடிவமைப்பாளரான ஜாங் நா என்பவர் ஷாங்காயில் ஆடை தயாரித்து வருகிறார். அவர் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் சாக்குகள் மற்றும் மீன்பிடி வலைகள் போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகள், பைகள் மற்றும் பிற பொருள்களை விற்பனை செய்து வருகிறார்.

இவரது விற்பனை பொருள்களின் மீது க்யூஆர் கோட் குறியீடுகள் ஒட்டப்பட்டிருக்கும். அவற்றை ஸ்கேன் செய்வதன் மூலம், அந்தந்த பொருள்களின் உருவாக்கம் மற்றும் அவற்றில் கலந்துள்ள கலவைப் பொருள்கள் முதலானவற்றை அறிந்து கொள்ளலாம். இவரது விற்பனை நிலையத்திற்கு வெளியே ஒரு பெரிய பெட்டியில் மக்கள் பயன்படுத்திய ஆடைகளை வைத்திருப்பார்.

இவரது வாடிக்கையாளர்களில் பலரும், இவர் விற்பனை செய்யும் துணிகள் மிருதுவாகவும், அணிபவர்களுக்கு வசதியாகவும் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

அரசு நினைத்தால் சாத்தியமாகும்

ஆனால் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளின் விலையானது, புதிதாய் தயாரிக்கப்படும் ஆடைகளின் விலையைவிட அதிகமானதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆடை ஆய்வுகள் பேராசிரியரான ஷெங் லு தெரிவிப்பதாவது – “மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு, நுகர்வோர் அதிக பணம் செலுத்தத் தயாராக இல்லை; அவர்கள் குறைந்த விலையிலேயே எதிர்பார்க்கிறார்கள்.

பயன்படுத்தப்பட்ட ஆடைகளை வாங்குதல், பிரித்தல் மற்றும் பக்குவப்படுத்துதல் ஆகியவற்றில் அதிக செலவுகள் இருப்பதால் மறுசுழற்சி முறையில் விலையும் அதிகமாக உள்ளது. ஆனால், புதிதாக ஆடைகள் தயாரிக்க மிகவும் மலிவான விலையே ஆகும்.

ஆடை மறுசுழற்சி நிறுவனங்களுக்கு நிதி ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதில்லை. உண்மையான மாற்றங்களுக்கு உயர்ந்த இடத்திலிருந்து ஊக்கம் அளிக்கப்படுதல் வேண்டும்.

அதாவது, சீன அரசு மின்சார வாகனத் தொழிற்துறையை ஆதரிப்பதைப் போல. அரசு நினைத்தால் எந்தவொரு துறைக்கும் நண்பராக இருக்க முடியும்” என்று கூறுகிறார்.

உலகம் முழுவதும் உருவாகிக்கொண்டிருக்கும் எத்தனையோ பிரச்சினைகளுடன், பயன்படுத்தப்பட்ட துணிகளும் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளிலுமே இந்தத் துணிகள் பெரும்பாலும் நிலத்தில்தான் புதைக்கப்படுகின்றன அல்லது குப்பைகளுடன் குப்பையாகச் சேகரித்து வைக்கப்பட்டு மக்க விடப்படுகின்றன. ஆனால், இவ்விரண்டுமே ஒரு காலகட்டத்தில் நிலத்தின் தன்மையைக் கடுமையாகப் பாதித்துவிடும், நிலத்தடி நீரை மாசுபடுத்திவிடும் என்பதுதான் நிலைமை.

எனினும், இன்னமும் இந்தக் கழிவுத் துணிகளின் ஆபத்து பற்றிப் பல நாடுகள் எவ்வித அக்கறையுமின்றிதான் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

You may also like

© RajTamil Network – 2024