புதுடெல்லி,
டெல்லி, சுல்தான்புரி பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ் சோலன்கி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தனக்கு ஆண் குழந்தை மட்டுமே பிறக்க வேண்டும் எனவும், அப்போதுதான் தனது சொத்துக்களை நிர்வகிக்க முடியும் எனவும் நீரஜ் உறுதியாக இருந்துள்ளார்.
இதனையடுத்து அவரது மனைவி பூஜா கர்ப்பமானார். இந்த நிலையில், கடந்த மே மாதம் 30-ம் தேதி அவருக்கு அரியானா மாநிலம் ரோட்டக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் நீரஜ் மன உளைச்சலிலும், ஆத்திரத்திலும் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 3-ம் தேதி, பிறந்து சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளின் சடலங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக நபர் ஒருவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மயானத்திற்கு சென்ற போலீசார், அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று குழந்தைகளின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தைகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே போலீசார் குழந்தைகளின் உடலை தோண்டி எடுத்த தகவல் அறிந்ததும், நீரஜ் தலைமறைவானார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில், அவரது செல்போன் எண்களை கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களின் எல்லைப் பகுதியான ரோட்டக் பகுதியில் பதுங்கியிருந்த நீரஜை, போலீசார் கைது செய்தனர். ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் இரண்டு பெண் குழந்தைகளையும் கொன்று புதைத்தாக நீரஜ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.