ஆதார் மூலம் தேர்வர்களின் தகவல் சரிபார்ப்பு: யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு அனுமதி

by rajtamil
Published: Updated: 0 comment 11 views
A+A-
Reset

ஆதார் மூலம் தேர்வர்களின் தகவல்களை சரிபார்க்கும் நடைமுறையை மேற்கொள்ள மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மத்திய அரசு புதன்கிழமை அனுமதி வழங்கியது.

தேர்வின் விண்ணப்ப நிலை உள்பட நியமனம் வரையிலான பல்வேறு நிலைகளிலும் விருப்பத்தின் பேரில் ஆதாரை அடிப்படையாகக் கொண்டு தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி குடிமைப் பணித் தேர்வுகளில் மோசடி செய்ததாக பெண் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கர் மீது பரபரப்பு புகார் எழுந்தது. அவரது தேர்ச்சியையும் யுபிஎஸ்சி ரத்து செய்தது.

இதையடுத்து, தேர்வர்களின் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட விரல்ரேகைப் பதிவு, முக அங்கீகார தொழில்நுட்பம், நுழைவுச் சீட்டில் உள்ள "க்யூஆர்' குறியீடு சரிபார்ப்பு, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடி கண்காணிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை தேர்வுகளில் பயன்படுத்த யுபிஎஸ்சி முடிவெடுத்திருந்தது.

இந்நிலையில், யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளின் விண்ணப்ப நிலையிலிருந்து நியமனம் வரையில் ஆதார் சரிபார்ப்பு நடைமுறையை விருப்பத்தின் பேரில் யுபிஎஸ்சி மேற்கொள்ள அனுமதி வழங்குவதாக மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024