புதுடெல்லி,
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தற்போது 2 நாள் பயணமாக டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை, சந்திரபாபு நாயுடுவுடன், அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம்மோகன் நாயுடு ஆந்திராவில் புதிய விமான நிலையங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் மத்திய மந்திரி ராம்மோகன் நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஆந்திராவில் ஏற்கனவே 7 விமான நிலையங்கள் உள்ளன. இதனை 14 ஆக உயர்த்த வேண்டும் என்பதே இலக்காகும். அதேசமயம் ராஜமுந்திரி, கடப்பா, விஜயவாடா விமான நிலையங்களில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்துதான் எங்கள் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்தினோம். விரைவில் இதற்கான பணிகளை தொடங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், குப்பம், காகுளம், தகதர்த்தி, நாகார்ஜுன சாகர் ஆகிய ஊர்களில் விமான நிலையத்துக்கான இடங்கள் சர்வே செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய விமானத் துறையும், மாநில அரசும் இணைந்து முடிவெடுக்கும்.
விமான நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புட்டபர்த்தி விமான நிலையத்தை அரசின் விமான நிலையமாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.