Friday, September 20, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் கூறியது என்ன..?

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை கழுத்து, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், "முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்த வெறும் 4 மணி நேரத்தில் அவர்களை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பின்னர் கொலைக்கான நோக்கம் என்ன..? யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். கொலை சம்பவத்தின்போது கொலையாளிகள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை. கத்தியால் வெட்டிதான் கொலை செய்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

தற்போது சென்னை பெரம்பூரில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024