ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காங். இளைஞர் அணி நிர்வாகி கைது

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உள்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனாலும் கொலைக்கான காரணம், மூளையாக செயல்பட்டவர்களின் பின்னணி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அதைக் கண்டறியும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை ஒன்றன் பின் ஒன்றாக போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அந்தவகையில், காவலில் உள்ள அருள் கொடுத்த தகவலின் படி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கு தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஸ்வத்தாமனின் தந்தையான ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன்விரோதம் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மொபைல் போனை ஆய்வு செய்த போது, சிறையில் இருந்தபடி ரவுடி நாகேந்திரன் அவரிடம் பேசியது தெரியவந்தது. நிலப்பிரச்சினை தொடர்பாக தன் மகனிடம் ஆம்ஸ்ட்ராங் மோதியதால், சிறையில் இருந்தபடி ரவுடி நாகேந்திரன் மிரட்டியிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் உள்பட இதுவரை 22 பேர் கைதாகி உள்ளனர்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதால் அஸ்வத்தாமன் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

© RajTamil Network – 2024