Tuesday, September 24, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக பெண் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வக்கீல் உள்பட 3 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி சென்னையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேர் கொலை நடந்த அன்றைய இரவே கைது செய்யப்பட்டனர்.

போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார். போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது பதிலுக்கு தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் திருவேங்கடம் உயிரிழந்தார். இதர 10 கொலையாளிகளும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வக்கீல் உள்பட 3 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைதான பெண்ணின் பெயர் மலர்கொடி (வயது 45) என்றும், சென்னை பாடர்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும் மலர்கொடி வக்கீலாக பணியாற்றுகிறார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கைதானவரில் மற்றொருவர் பெயர் ஹரிஹரன் என்றும், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த அவரும் வக்கீல் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர திருநின்றவூரை சேர்ந்த சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், போலீசார் கூறும்போது, கொலையாளிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது உண்மை என்றும், எவ்வளவு தொகை கைமாறியது என்பது குறித்து விசாரணை முடிந்த பின்னரே சொல்லப்படும் என்றும் தெரிவித்தனர். கைதான 2 வக்கீல்களும் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா மகளிரணி செயலாளர் அஞ்சலை (47) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலையை கட்சியில் இருந்து நீக்கம் செய்து பாஜக தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி வந்த அஞ்சலை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறுவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024