Saturday, September 28, 2024

ஆயுள் சிறைக் கைதி ‘அட்டாக்’ பாண்டிக்கு 10 நாள் பரோல்: ஐகோர்ட் உத்தரவு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

ஆயுள் சிறைக் கைதி ‘அட்டாக்’ பாண்டிக்கு 10 நாள் பரோல்: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ஆயுள் கைதியாக சிறையில் உள்ள மதுரை ரவுடி ‘அட்டாக்’ பாண்டிக்கு 10 நாள் சாதாரண பரோல் விடுமுறை வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் ரவுடி ‘அட்டாக்’ பாண்டி. இவருக்கு மதுரை நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை கொலை செய்த வழக்கில் 2019-ல் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. தற்போது ‘அட்டாக்’ பாண்டி மதுரை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில், ‘அட்டாக்’ பாண்டியை பரோலில் விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி தயாளு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

அதில், "நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் என் கணவர் ‘அட்டாக்’ பாண்டிக்கு 2019-ல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு ஆயுள் தண்டனை வழங்கியது. அதையடுத்து தன் கணவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார். எனக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தனது மருத்துவ செலவுக்காக கணவரின் பெயரில் உள்ள சொத்துகளை விற்க வேண்டும்.

அதற்காக சிறையில் உள்ள ‘அட்டாக்’ பாண்டிக்கு ஒரு மாத காலம் பரோல் விடுமுறை வழங்கக் கோரி சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன். எனது மனு நிராகரிக்கப்பட்டது. அதனை ரத்து செய்து ‘அட்டாக்’ பாண்டியை 10 நாள் பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்” என ’அட்டாக்’ பாண்டி மனைவி தயாளு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.ஜெகதீஷ் சந்திரா, ராஜசேகர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறை நிர்வாகம் தரப்பில், "மனுதாரரின் கணவர் மீது வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. குற்றவாளி என விடுதலை செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரும் சாதாரண விடுப்பு வழங்க பரிந்துரைக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கணவருக்கு 10 நாள் சாதாரண விடுப்பு வழங்கப்படுகிறது. ‘அட்டாக்’ பாண்டிக்கு போதிய காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர் ஊடகங்களுக்கு எவ்விதமான பேட்டியும் வழங்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் விடுப்பு வழங்க உத்தரவிட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024