Friday, September 20, 2024

ஆருத்ரா கோல்டு நிர்வாகியின் ஜாமீன் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தது ஐகோர்ட்! 

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

ஆருத்ரா கோல்டு நிர்வாகியின் ஜாமீன் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைதான திருச்சி கிளை நிரவாகியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொதுமக்களிடம் ரூ.2,438 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருச்சி கிளையின் நிர்வாகியான சூசைராஜ் என்பவர் இரண்டாவது முறையாக மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “இந்த மோசடிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னிடம் இருந்த சேமிப்புத் தொகையையும் ஆருத்ராவில் தான் முதலீடு செய்துள்ளேன். அந்த தொகையை மீட்டுத் தரக் கோரி போலீஸில் புகார் அளித்துள்ளேன். இந்நிலையில், போலீஸார் என்னையும் இந்தவழக்கில் கைது செய்துள்ளனர். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்,” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் சூசைராஜுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சூசைராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like

© RajTamil Network – 2024