Monday, September 23, 2024

“ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே அரசியலமைப்பிற்கு எதிரானது..” – மல்லிகார்ஜுன கார்கே தாக்கு

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

புதுடெல்லி,

மாநிலங்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் அரசு விவசாயிகளை தவறாக வழிநடத்தியது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.

இதனிடையே பிரதமர் மோடி பேசியபோது குறுக்கிட்டு பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு வழங்கும்படி எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கைக்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து கார்கேவை பேச அனுமதிக்கும்படி எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்த அமளிக்கு மத்தியில் மோடி தனது உரையை தொடர்ந்தார்.

பின்னர் கார்கே எழுந்து தன்னை பேச அனுமதிக்குமாறு பலமுறை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து வலியுறுத்தியதால் கார்கே பேசுவதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி அளித்தார். அனுமதி கிடைத்தபோதும், தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிய இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததற்கு அவைத்தலைவர் தன்கர் கண்டனம் தெரிவித்தார். இது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் என குறிப்பிட்டார். பிரதமர் மோடியும் அதிருப்தி தெரிவித்தார்.

இந்நிலையில் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து செய்தியாளார்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ஆளும் பா.ஜனதாவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்., அரசியலமைப்புக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஜனாதிபதி உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த பிரதமர் தவறான தகவல்களைக் கொடுத்ததால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். பொய்களைச் சொல்வதும், மக்களை தவறாக வழிநடத்துவதும், உண்மைக்கு எதிராகப் பேசுவதும் அவரது வழக்கம். அரசியலமைப்பை எதிர்த்தவர்கள், நிராகரித்தவர்கள், இப்போது, அதைப் பாதுகாப்பது பற்றிப் பேசுகிறார்கள். தொடக்கத்தில் இருந்தே அவர்கள் அரசியலமைப்பிற்கு எதிரானவர்கள்" என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024