Wednesday, October 2, 2024

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு திடீர் பயணம்: பிரதமரை சந்திப்பார் என தகவல்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு திடீர் பயணம்: பிரதமரை சந்திப்பார் என தகவல்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் மோடி, அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அரசு இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், கடந்த ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிய தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அரசு வேறு, அரசியல் வேறு: ஆளுநரை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘ஆளுநர் பதவிக்கு மரியாதை அளிக்கிறோம். அரசு என்பது வேறு, அரசியல் வேறு” என்று எழுப்பிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய அரசின் சார்பில் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் பங்கேற்றார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாஜக – திமுக இடையில் இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். இவரது பதவிக்காலம் கடந்த ஜூலை 31-ம் தேதியே முடிவுற்ற நிலையில், தொடர்ந்து ஆளுநராக நீடித்துவருகிறார்.

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி, நாளை (ஆக.21-ம்தேதி) மீண்டும் சென்னை திரும்புகிறார். இன்று, அல்லது நாளை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும், அப்போது பதவி நீட்டிப்பு தொடர்பாக பேச வாய்ப்புள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

You may also like

© RajTamil Network – 2024