இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்?: அன்புமணி ராமதாஸ்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அவர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடங்கப்பட்ட பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அந்தப் பணிகளுக்காக காத்திருக்கும் தேர்வர்களிடையே ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18-ஆம் நாள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் 3 மாதங்களுக்கு மேலாகியும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. பட்டதாரி தமிழ் ஆசிரியர்களைப் பொறுத்தவரையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பி.லிட் பட்டம், பிற பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இளங்கலை தமிழ் பட்டத்திற்கு இணையானதா? என்ற சர்ச்சை எழுந்ததால் 164 தேர்வர்களின் தேர்ச்சியை தீர்மானிப்பதில் சிக்கல் எழுந்தது. இது தொடர்பாக நான் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக பி.லிட் பட்டம், இளங்கலை தமிழ் பாட பட்டத்திற்கு இணையானது தான் என்று அறிவிக்கப்பட்டு சிக்கல் தீர்க்கப்பட்டது. அதன் பின் அரசு நினைத்திருந்தால், அவர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வை ஒரே நாளில் நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்க முடியும். ஆனால், இன்று வரை அதை செய்யவில்லை.

இதையும் படிக்க |விஸ்தாராவின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதேபோல், அரசு பள்ளிகளுக்கு 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை 21-ஆம் நாள் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒரு போட்டித் தேர்வு நடத்தப்பட்ட அடுத்த சில நாட்களில் அதற்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட வேண்டும். அவ்வாறு வெளியிடப்பட்ட விடைக்குறிப்புகள் தொடர்பாக தேர்வர்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்துகள் இருந்தால், அவை ஆய்வு செய்யப்பட்டு ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்ட பிறகு தான் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தொடங்கும். ஆனால், தேர்வு நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரை விடைக்குறிப்புகளை தேர்வு வாரியம் வெளியிட வில்லை. இதை விட வேறு முக்கியமான பணி என்ன இருக்கிறது? என்பதும் தெரியவில்லை.

விடைக்குறிப்புகளே இன்னும் வெளியிடப்படாத நிலையில், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 6 மாதங்கள் ஆகலாம். பிற நடைமுறைகளும் முடிந்து அவர்கள் பணியில் சேருவதற்குள் அடுத்தக் கல்வியாண்டு தொடங்கி விடக்கூடும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேல் நியமிக்கப்படாத நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி அரசு கவலைப்படாமல் இருப்பது சரியல்ல.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து அரசு பள்ளிகளுக்கு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024