Monday, September 23, 2024

இணையதள வாயிலாக கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் உயர்வு – டி.டி.வி. தினகரன் கண்டனம்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

வீட்டு கட்டட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட சுயசான்று அடிப்படையில் இணையதளம் வாயிலாக கட்டுமானத் திட்ட அனுமதி பெறும் நடைமுறையின் கீழ், வீட்டு வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் இருமடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உதாரணத்திற்கு 8,900 சதுர அடியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு கடந்த மாதம் 4.5 லட்ச ரூபாய் கட்டணமாக செலுத்திய நிலையில், தமிழக அரசின் இந்த புதிய நடைமுறைக்கு பின்னர் தற்போது 9.5 லட்ச ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருப்பதாகவும் அதனால் வீடுகளின் விலை உயர வாய்ப்பிருப்பதாகவும் கட்டுமானத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, சொத்துவரி, பதிவுக்கட்டணம், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என அடுத்தடுத்த பாதிப்புகளை சந்தித்துவரும் தமிழக மக்களுக்கு, வீட்டு வரைபட கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டணமும் இருமடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பேரிடியாக விழுந்துள்ளது.

கட்டட அனுமதி பெறுவதற்கான நடைமுறையை எளிதாக்குகிறோம் எனும் பெயரில் அதற்கான கட்டணங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தியிருப்பது, சொந்த வீடு எனும் கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு தி.மு.க. அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.

எனவே, தமிழக மக்களை மென்மேலும் துன்பத்திற்குள்ளாக்கும் வீட்டு கட்டட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சுயசான்று அடிப்படையில் ஏற்கனவே இருந்த கட்டண நடைமுறையையே பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024