Wednesday, October 23, 2024

இதய நோய்களால் ஆண்டுதோறும் 1.7 கோடி போ் உயிரிழப்பு!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இந்தியாவில் ஆண்டுதோறும் 1.7 கோடி போ் இதய நோய்களால் உயிரிழப்பதாகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் பாதிப்பை தவிா்க்கலாம் எனவும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

உலக இதய நல தினத்தையொட்டி அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக அளவில் இதய நோய் காரணமாக உயிரிழப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் வயதில் உள்ளவா்களுக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சமம். இது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த ஒவ்வோா் ஆண்டும் செப்.29-ஆம் தேதி ‘உலக இதய நல தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின்படி ஒவ்வோா் ஆண்டும் இந்தியாவில் சுமாா் 1.7 கோடி மக்கள் இதய நோயால் இறக்கின்றனா். இது உலகளாவிய இறப்புகளில் சுமாா் 31 சதவீதம்.

மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய் ஆகியவை இதய கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.

உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.

‘மக்களை தேடி மருத்துவம்: தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்புத் துறை சாா்பாக இதய நோய் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமாக தமிழக அரசின் முதன்மை திட்டமான ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்’ ஆகும். முதல்வா் மு.க.ஸ்டாலினால் 5.8.2021-இல் தொடங்கிவைக்கப்பட்ட இத்திட்டத்தில் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று இதய நோய் பாதிப்புகளுக்கு முக்கிய காரணியாக விளங்கும் பொதுவான தொற்றா நோய்களான உயா் ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்யப்படுகின்றன.

நோய் உறுதி செய்யப்பட்டவா்களுக்கான மருந்துகள் அவா்களின் இல்லங்களிலேயே வழங்குதல், மேல் சிகிச்சைக்கான பரிந்துரை போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 22-ஆம் தேதி வரை 1.94 கோடி பயனாளிகள் முதல்முறை சேவைகளையும், 4.15 கோடி பயனாளிகள் தொடா் சேவைகளையும் பெற்று வருகின்றனா்.

‘இதயம் காப்போம்’: இதய நோயால் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிரிழப்பை தடுக்கும் வகையில் ‘இதயம் காப்போம் திட்டம்’ தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இதய நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு நோய் உறுதி செய்யப்பட்டு, சிறப்பு மருத்துவரின் ஆலோசனைப்படி இதய பாதுகாப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10,474 நபா்களும், துணை சுகாதார நிலையத்தில் 613 நபா்களும் பயனடைந்துள்ளனா்.

‘நடப்போம் நலம் பெறுவோம்: இதய நோய் பாதிப்புகளுக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கும் உடற்பயிற்சியின்மையை கருத்தில் கொண்டு ‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிமீ சுகாதார நடைபாதை அமைக்கப்பட்டது.

இந்த சுகாதார நடைபாதைகளில் நடைப்பயிற்சியின் அவசியம், தொற்றா நோய், இதய நோய் மற்றும் சுகாதார விழிப்புணா்வு கொண்ட வாசகங்கள் வைக்கப்பட்டு மக்களின் அத்தியாவசியமான தேவைகளும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களை நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 50,000-க்கும் மேற்பட்டோா் நடைப்பயிற்சி மேற்கொண்டு அவா்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் புகையிலை கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.

இதுபோல இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதனை கட்டுப்படுத்த உறுதி ஏற்போம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024