இந்தியாவில் நடைபெற்ற 2004 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் கேப்டனாக தம்மால் வெல்ல முடியாது என்று பயந்ததாக கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
சிட்னி,
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் நவ.22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
ஆண்டாண்டு காலமாக இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த தொடரில் வரலாற்றில் அழிக்க முடியாத சில நிகழ்வுகளும் வெற்றிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 2018 – 19 பார்டர் கவாஸ்கர் கோப்பையை முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அதே போல 2020 – 21 தொடரின் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா பின்னர் 2 – 1 (4 போட்டிகள்) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் சரித்திர வெற்றியை பெற்றது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி பெற்றதில்லை.
கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அதே போல கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது போட்டியில் மோசமாக விளையாடிய இந்தியா பாலோ ஆன் பெற்றது. ஆனால் 2வது இன்னிங்சில் பேட்டிங்கில் விவிஎஸ் லக்ஷ்மன் (281 ரன்கள்) – ராகுல் டிராவிட் (180 ரன்கள்) அசத்தியதும், பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் கலக்கியதாலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா மாஸ் வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற கடைசிப் போட்டியிலும் வென்ற இந்தியா வெற்றி பெற்று 2 – 1 (3 போட்டிகள்) என்ற கணக்கில் ஸ்டீவ் வாக் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரை வென்றது.
இந்நிலையில் இந்தியாவின் அந்த வெற்றி மனதளவில் தமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். அதனால் இந்தியாவில் நடைபெற்ற 2004 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் கேப்டனாக தம்மால் வெல்ல முடியாது என்று பயந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி இந்திய மண்ணில் வரலாற்று வெற்றியை பெற்றதாகவும் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இது குறித்து நினைவுகளை பகிர்ந்த அவர் பேசியது பின்வருமாறு:-"இங்கிலாந்தில் நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ரிக்கி பாண்டிங் விரலில் காயத்தை சந்தித்ததால் நான் மிகவும் பதற்றமடைந்தேன். ஏனெனில் அவரது காயம் உறுதி செய்யப்பட்டால் தொடரிலிருந்து வெளியேறுவார். அதே போல இந்தியாவுக்கும் அவரால் வர முடியாது. அவர் வெளியேறும் பட்சத்தில் கேப்டன் பொறுப்பை நான் ஏற்க வேண்டும். அதனால் உடனடியாக நான் 2001 நினைவுகளை நினைத்து பதற்றமடைந்தேன்.
என்னைப் பொறுத்த வரை அது வரலாற்றின் ஒரு காவியத்தை போன்ற தொடராகும். ஏனெனில் முதல் போட்டியில் சதமடித்த நான் கொல்கத்தாவில் 2 முறை டக் அவுட்டாகி கடைசிப் போட்டியில் 2 முறை 1 ரன்னில் அவுட்டானேன். எனவே அந்த சுற்றுப் பயணத்தை நினைத்து மனதளவில் நான் பயந்தேன். அங்கே என்னால் தயாராகி சமாளிக்க முடியுமா? என்று உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன்" என கூறினார்.