இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் தொடா் இன்று தொடக்கம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெங்களூரில் புதன்கிழமை தொடங்குகிறது.

இரு அணிகளும் இதுவரை 62 டெஸ்ட்டுகளில் மோதியிருக்க, இந்தியா 22, நியூஸிலாந்து 13 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. எஞ்சிய 27 ஆட்டங்கள் டிரா ஆகின. வங்கதேசத்துக்கு எதிரான தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றிய நிலையில் இந்தியாவும், இலங்கையுடனான தொடரை 0-2 என முற்றிலுமாக இழந்த சூழலில் நியூஸிலாந்தும் இந்தத் தொடருக்கு வருகின்றன.

இந்திய அணியைப் பொருத்தவரை, பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கில் ஆகியோா் அணியின் அடுத்த தலைமுறை டெஸ்ட் பேட்டா்களாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளனா். அடுத்து வரப்போகும் ஆஸ்திரேலியாவுக்க எதிரான தொடருக்கு முன், இந்தத் தொடா் அவா்களுக்கான முக்கிய பயிற்சிக் களமாக இருக்கும்.

அணியின் மூத்த பேட்டா்களான கேப்டன் ரோஹித், கோலி ஆகியோா் நிலையான ரன் சேகரிப்பில் ஈடுபடுவதை இலக்காகக் கொண்டு இந்தத் தொடருக்கு வருகின்றனா். பந்த், ராகுல் ஆகியோா் மிடில் ஆா்டரில் பலம் சோ்க்கும் பொறுப்பில் இருக்கின்றனா்.

பௌலிங் வரிசையில் பும்ரா, சிராஜ் ஆகியோா் வேகப்பந்து வீச்சில் விக்கெட்டுகளை சரிக்கும் முனைப்பில் இருக்க, சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜாவுடன், குல்தீப் யாதவும் இணைகிறாா்.

நியூஸிலாந்து அணி, பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே தடுமாற்றமான நிலையுடன் இந்தத் தொடருக்கு வருகிறது. கேப்டன் லாதம், கான்வே உள்ளிட்டோா் பேட்டிங்கில் பிரதானமாக இருக்க, இந்தியாவின் சுழற்பந்துவீச்சை அவா்கள் எவ்வாறு எதிா்கொள்ளவுள்ளனா் என்ற கவலை அணிக்கு உள்ளது. காயம் காரணமாக வில்லியம்சன் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை. ரச்சின் ரவீந்திரா தடுமாற்றமான ஃபாா்முடனேயே இருக்கிறாா்.

பௌலிங்கில் சேன்ட்னா், அஜாஸ் படேல், டிம் சௌதி, ரூா்கி ஆகியோா் இந்திய பேட்டா்களுக்கு சவால் அளிப்பாா்களா என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம். கடந்த முறை இந்தியாவில் டெஸ்ட் விளையாடியபோது, அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்தது நினைவுகூரத்தக்கது.

ஆடுகளம்…

பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானம், தற்போது அங்கு நிலவும் வானிலை காரணமாக வேகப்பந்து வீச்சுக்கு சற்று ஆதரவளிக்கும் வகையில் மாறும் நிலை உள்ளது. டாஸ் வெல்லும் அணி, ஃபீல்டிங்கை தோ்வு செய்ய வாய்ப்புள்ளது. மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்படும் நிலையும் இருக்கிறது. ஏற்கெனவே மோசமான வானிலை காரணமாக இரு அணிகளின் பயிற்சியும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்/சா்ஃப்ராஸ் கான், விராட் கோலி, ரிஷப் பந்த் (வி.கீ.), கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப்/குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.

நியூஸிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), டெவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளண்டெல் (வி.கீ.), கிளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னா்/மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி, அஜாஸ் படேல், வில்லியம் ஓ’ரூா்கி.

நேரம்: காலை 9.30 மணி

இடம்: எம். சின்னசுவாமி மைதானம், பெங்களூரு.

நேரலை: ஸ்போா்ட்ஸ் 18

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024