கிழக்கு லடாக் பகுதியில் இந்திய – சீன எல்லையில் இருநாட்டின் படைகளைப் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து, தீபாவளிப் பண்டிகையையொட்டி இருதரப்பினரும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைத் தாண்டி வந்த சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த மோதலை தொடர்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருநாடுகளும் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்தன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது.
இதையும் படிக்க: விண்ணப்பித்துவிட்டீர்களா..? சர்வதேச விமான நிலையத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!
எனினும், இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவாா்த்தையைத் தொடர்ந்து, அந்த எல்லையில் சச்சரவுக்குரிய பல பகுதிகளில் இருந்து இருநாடுகளின் வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.
கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரா்களை திரும்பப் பெறவும், அங்கு ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா, சீனா இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
படை விலகலைத் தொடர்ந்து, கடந்த 2020-இல் இருந்த நிலைக்கு எல்லை திரும்பி உள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், இந்திய மற்றும் சீன படைவீரர்கள் தீபாவளியையொட்டி எல்ஏசியின் பல எல்லைகளில் இனிப்புப் பரிமாற்றம் நடைபெற்றதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.