இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர் காலமானார்; முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசியத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர்களில் எஸ்.எம்.பாக்கரும் ஒருவர். நிர்வாகிகள் சிலருடன் ஏற்பட்ட கருத்து முரணால் அங்கிருந்து பிரிந்து பி.ஜெய்னுல் ஆபிதீனுடன் இணைந்து 2004-ம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை எஸ்.எம்.பாக்கர் உருவாக்கினார்.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஆபிதீனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் இருந்து விலகிய எஸ்.எம்.பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைத் தொடங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருதய நோயால் பாதிக்கப்பட்ட எஸ் எம் பாக்கர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று நலமடைந்தார்.

எனினும், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,அவருக்கு நுரையீரலில் நிமோனியா தொற்று ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எஸ்.எம்.பாக்கர் உடல் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது மறைவிற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024