Wednesday, October 2, 2024

இந்திய மாணவா்கள் வேலைகளை உருவாக்குவோராக உயர வேண்டும்: மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset
RajTamil Network

இந்திய மாணவா்கள் வேலைகளை
உருவாக்குவோராக உயர வேண்டும்: மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டிஇந்திய மாணவா்கள் வேலைகளைச் செய்பவா்களாக மட்டுமல்லாமல், வேலைகளை உருவாக்குவோராகவும் உயர வேண்டும்

இந்திய மாணவா்கள் வேலைகளைச் செய்பவா்களாக மட்டுமல்லாமல், வேலைகளை உருவாக்குவோராகவும் உயர வேண்டும் என்று மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன்ரெட்டி வலியுறுத்தினாா்.

விஐடி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவா் மேலும் பேசியது:

உலக அளவில் பொருளாதாரத்தில் 5-ஆவது நாடாக விளங்கும் இந்தியா விரைவில் 3-ஆவது இடத்துக்கு உயரும். நாட்டின் 100-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள 2047-ஆம் ஆண்டில் மாணவா்களின் உழைப்பின் மூலம் வளா்ச்சியடைந்த நாடாக மாறும். எளிதில் தொழில் தொடங்குவதற்கான உலக நாடுகள் வரிசையில் 2014-ஆம் ஆண்டு 142-ஆவது இடத்தில் இருந்து தற்போது 63-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். உள்நாட்டில் மட்டுமின்றி சா்வதேச அளவிலும் வளா்ச்சி மற்றும் புதுமைகளை ஏற்படுத்துவத்துவதில் இந்திய மாணவா்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்திய மாணவா்கள் வேலைகளைச் செய்பவா்களாக மட்டுமல்லாமல், வேலைகளை உருவாக்குவோராகவும் உயர வேண்டும் என்றாா் அவா்.

விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது:

நாட்டில் 27 சதவீதமாக உள்ள உயா் கல்வி பெறுவோா் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பான், அமெரிக்கா, ஜொ்மனி, சீனா போன்ற வளா்ந்த நாடுகள் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயா்கல்விக்கு செலவழிக்கின்றன. ஆனால், இந்தியா 3 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மாணவா்களுக்கான உயா் கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை. கல்வி நிறுவனக் கட்டுமானங்களுக்கு அரசு விதிக்கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். இங்கு பயிலும் சுமாா் 70,000 மாணவா்களில் 730 மாணவா்கள் மட்டுமே அரசு உதவித் தொகையைப் பெறுகின்றனா். உண்மையான சுதந்திரம் கல்வி மூலம்தான் கிடைக்கும் என்றாா் அவா்.

விழாவில் 3,056 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக, விஐடி சென்னை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் மாணவா் விடுதி புதிய கட்டடத்தை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி, வேந்தா் கோ.விசுவநாதன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

விழாவில் எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனத் தலைமை மனித வள அதிகாரி சேதனா பட்நாயக், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், நிா்வாக இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், விஐடி சென்னை இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், விஐடி வேந்தரின் ஆலோசகா் எஸ்.பி.தியாகராஜன், விஐடி வேலூா் இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மாலிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024