இந்திரா காந்தியை விடுதலை செய்யக்கோரி விமானத்தை கடத்திய காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பைரியா மாவட்டம் மூன் ஷப்ரா கிராமத்தை சேர்ந்தவர் போலநாத் பாண்டே (வயது 71). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

இதனிடையே, 1978 ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில் இந்திரா காந்தி விடுதலை செய்யப்பட்டார்.

அதேவேளை, இந்திரா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்ற நிலையில் போலநாத் பாண்டே இந்திய விமானத்தை கடத்தினார். போலநாத் பாண்டே தனது கூட்டளியுடன் சேர்ந்து கொல்கத்தாவில் இருந்து டெல்லி நோக்கி 132 பேருடன் புறப்பட்ட விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்தினார். போலி துப்பாக்கியை கொண்டு விமானத்தை கடத்திய பாண்டே விமானத்தை நேபாளத்திற்கு கொண்டு செல்லும்படி விமானியை மிரட்டினார். ஆனால், எரிபொருள் இல்லாததால் விமானம் வாரணாசியிலேயே தரையிறக்கப்பட்டது. பின்னர், விமானத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமானத்தை கடத்தியது தொடர்பாக பாண்டே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கு பின்னர் திரும்பப்பெறப்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து போலநாத் பாண்டேவின் பெயர் காங்கிரஸ் வட்டாரத்தில் பெருமளவு பரவியதையடுத்து அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் 1980 மற்றும் 1989ம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் டோபா (தற்போது பைரியா) தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேவேளை, அவர் சேலம்பூர் தொகுதி எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், எம்.பி. தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வான போலநாத் பாண்டே இன்று உயிரிழந்தார். 71 வயதான பாண்டே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் லக்னோவில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போலநாத் பாண்டே இன்று தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024