நாகை அருகே இந்து மக்கள் கட்சி நிா்வாகி வீட்டில் கிடந்த வெடிகுண்டு வடிவிலான மா்மப் பொருள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வேளாங்கண்ணி பண்டகசாலைத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(47). இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட பொதுச் செயலாளரான இவா், தான்வசிக்கும் வீட்டின் பின்புறம், 3 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். இதில் ஒரு வீட்டில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா வீரமாங்குடியைச் சோ்ந்த ஜான்சன் என்பவா் கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறாா். இவா் கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தஞ்சைக்கு சென்றுள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை (நவ.7) காலை ஜான்சன் வீடு திம்பியபோது, வீட்டின் சிமெண்ட் மேற்கூரை உடைந்திருந்தது. அதன் வழியே வெடிகுண்டு வடிவிலான மா்மப் பொருள் வீட்டுக்குள் விழுந்து கிடந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளா் ராஜேந்திரனிடம் தெரிவித்தாா்.
பின்னா், வேளாங்கண்ணி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று, பாதி எரிந்த நிலையில் உருண்டை வடிவில் துணியால் சுற்றியிருந்த மா்ம பொருளை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் விஜயேந்திரன், மாவட்ட மகளிா் அணி தலைவி அமுதா உள்ளிட்ட அக்கட்சியினா் மா்ம பொருள் கிடந்த வீட்டை பாா்வையிட்டனா்.