Thursday, November 7, 2024

இந்த திதியில் புனித நீராடினால் பாவங்கள் விலகும்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

பாபஹர தசமி நாளில் ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கி அளவற்ற புனிதம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.

வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் தசமி திதி 'தசஹர தசமி' என்றும் 'பாபஹர தசமி' என்றும் கூறப்படுகிறது. இந்நாளில்தான் இலங்கை வேந்தன் ராவணனைக் கொன்ற பாவம் நீங்க ஸ்ரீராமபிரான் மணலில் லிங்கப் பிரதிஷ்டை செய்து, சேதுக் கரையில் வழிபட்டார் என்று ஸ்ரீஸ்காந்தம் என்னும் நூல் கூறுகிறது. மேலும், வைகாசி சுக்லபட்ச தசமி திதியானது பத்து வித பாவங்களை போக்கும் என்று பழம் நூல்கள் கூறுகின்றன. அந்நாளில் சேது என்று போற்றப்படும் ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தத்திலும் கோவிலுக்குள் இருக்கும் புனித நீர் நிலைகளிலுமே நீராடினால் பாவங்கள் நீங்கி அளவற்ற புனிதம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.

வாக்கினால் செய்வது நான்கு, சரீரத்தால் செய்வது மூன்று, மனத்தால் இழைப்பது மூன்று. ஆக, இந்த பத்து பாவங்களும் தெரிந்தோ, தெரியாமலோ செய்தால் இவற்றைப் போக்கிக் கொள்ள இந்த பாபஹர தசமி உதவுகிறது.

கடுஞ்சொல், உண்மையில்லாத பேச்சு, அவதூறாகப் பேசுவது, அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாக பேசுவது, நமக்குக் கொடுக்கப்படாத பொருட்களை நாம் எடுத்துக் கொள்வது, அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது, பிறர் மனைவிக்கு ஆசைப்படுவது, மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது, மனதில் கெட்ட எண்ணங்களை நினைத்தல், பிறபொருட்களிடமும், மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்ளுதல்… இந்த பத்து பாவங்களும் குறிப்பிட்ட புண்ணிய காலமான வைகாசி அமாவாசைக்குப்பின் வரும் தசமி அன்று சேதுவில் நீராடினால் நீங்கும் என்பது விதியாகும்.

ராமேஸ்வரம் செல்வது என்பது எல்லோராலும் முடியாத காரியம். எனவே அந்தப் புண்ணிய காலத்தில் அவரவர் வசிக்கும் ஊரின் அருகாமையில் உள்ள புனித நதியிலோ, ஆற்றிலோ குளத்திலோ நீராடலாம். நதியிலும், ஆற்றிலும் நீர் இல்லாது போனாலும் சிவபெருமானையும் திருமாலையும் மனதில் நினைத்து 'இனிமேல் பாவங்கள் செய்ய மாட்டேன்' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, வடக்கு நோக்கி வீட்டில் குளித்தாலும் பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

இந்த புண்ணிய நாளில் தான் கங்கா தேவி தேவலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள் என்று புராணம் கூறுகிறது. அன்று கங்கா தேவியை நினைத்து நீராடினாலும் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. 'வைகாசி அமாவாசைக்குப் பின், பிரதமையிலிருந்து தசமி வரை கங்கை நதியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்' என்று கந்த புராணம் கூறுகிறது. இந்நாளில் முன்னோர்களுக்குப் பிதுர் பூஜை செய்வது போற்றப்படுகிறது. ஏழைகளுக்கு வஸ்திர தானம், அன்னதானம் செய்தால் கூடுதல் புனிதம் கிட்டுவதுடன் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024