Tuesday, September 24, 2024

இந்த வாரம் கலாரசிகன் – 14-07-24

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

இந்த வாரம் கலாரசிகன் – 14-07-24தருமை ஆதீனத்தின் கல்வி சேவைகள்: மறைந்திருக்கும் சாதனைகள்இந்த வாரம் கலாரசிகன்  - 14-07-24

தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பட்டத்துக்கு வந்த பிறகு அவரை மடத்தில் சென்று சந்திக்கவில்லை என்கிற மனக்குறை எனக்கு இருந்தது. 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் அன்பையும், ஆசியையும் பெற்றிருந்த எனக்கு, இப்போதைய குருமகா சந்நிதானம், தருமை ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாக இருந்தபோதே நெருக்கம்.

அந்த மனக்குறையைத் தீர்க்கும் விதத்தில் அவர் சமீபத்தில் எனக்கு ஒரு கட்டளை விதித்தார். வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தருமை ஆதீனத்தின் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன், ஸ்ரீமுத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்தக் கட்டளை.

அங்கே சென்றபோதுதான், தருமை ஆதீனம் வெளியில் தெரியாமல் எத்தகைய கல்விப் புரட்சியைச் செய்து வருகிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். தமிழகத்தின் பல பகுதிகளில் தருமை ஆதீனத்தால் நடத்தப்படும் ஏறத்தாழ 50 கல்விச்சாலைகள் செயல்படுகின்றன என்கிற செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மட்டுமல்லாமல், இசைக் கல்லூரி, ஆகமக் கல்லூரி, ஓதுவார் பயிற்சிக் கல்லூரி, செவிலியர் பயிற்சிக் கல்லூரி என்று வெளியில் தெரியாமல் மிகப்பெரிய கல்விப் புரட்சியே தருமை ஆதீனத்தால் நிகழ்த்தப்படுகிறது. பள்ளி மாணவர்கள் யோகா உள்ளிட்ட பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

தருமை ஆதீனத்தில் தினந்தோறும் அதிகாலை 6 மணி முதல் 8 மணி வரையில் சந்நிதானமே நடத்தும் சொக்கநாதர் பூஜையில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. அதிகாலை பூஜையும், தீப ஆராதனையும் கண்கொள்ளாக்காட்சி. சைவநெறியைக் கடைப்பிடிக்கும் பக்தர்கள், வாழ்வில் ஒருமுறையேனும் அந்தப் பூஜையில் கலந்துகொள்ள வேண்டும்.

எந்த ஊரில் இருந்தாலும், அதிகாலைப் பூஜைக்கு மயிலாடுதுறை தருமை ஆதீனத்துக்கோ அல்லது சென்னையில் உள்ள மடத்துக்கோ குருமகா சந்நிதானம் அந்தப் பூஜைக்கு வந்துவிடுவது வழக்கம். கேதார்நாத் தரிசனத்துக்கும், நாடாளுமன்றத்தில் "செங்கோல்' நிறுவிய நிகழ்வுக்கும் சென்றபோதும்கூட, தனது தினசரி பூஜைக்கு சந்நிதானம் வந்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

தமிழும், சைவமும் உடலும் உயிரும் என்று சொல்லும் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனது வழிகாட்டியாகக் கருதுவது, "வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து, இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்' என்கிற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி இலக்கிய விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருக்கிறது. குருமகா சந்நிதானத்தின் அதிகாலை பூஜையில் கலந்துகொள்ள இறைவன் வழங்கி இருக்கும் இன்னொரு வாய்ப்பு. இதைத்தான் குருவருளும், திருவருளும் என்பார்கள்!

——————————————————————————————————–

புத்தக விமர்சனத்துக்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது, "மா.அரங்கநாதன் படைப்புகள்' என்கிற அவரது படைப்புகளின் தொகுப்பு. அகரமுதல்வனால் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், அந்த எழுத்தாளரின் முழுப் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள வழிகோலும் என்று துணிந்து சொல்லலாம்.

எழுத்தாளர் மா.அரங்கநாதனை, நான் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில், பேரின்ப விலாஸ் விடுதியில் ஆறு நண்பர்களுடன் சிறியதொரு அறையில் தங்கியிருந்தபோது, தள்ளி நின்று பார்த்திருக்கிறேன். "முன்றில்' இலக்கிய இதழின் ஆசிரியர் என்று, மரியாதையுடனும் பிரமிப்புடனும் பார்ப்பேன். வெகுஜன இதழ்களில் நான் எழுதத் தொடங்கி இருந்த நேரம் அது. "முன்றில்' போன்ற இலக்கிய இதழ்கள் அப்போதைய என்னுடைய சிந்தனையோட்டத்துக்குத் தொடர்புடையதாக இருக்கவில்லை.

மிக அருகில் இருந்து அவரை நான் பார்த்திடும் வாய்ப்பு, மதுரை சொக்கநாத பெருமான் சந்நிதியில்தான் எனக்குக் கிடைத்தது. உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த தனது மகனுடன், மதுரை மீனாட்சி அம்மன் தரிசனத்துக்கு வந்திருந்தார் அவர். அங்கே அவரைப் பார்த்தபோது, ஒரு நிமிடம் நான் அதிர்ந்துதான் போனேன். தலைமையாசிரியர் முன்னால் மாணவன் நிற்பதுபோல அவர் முன்னால் எதிர்வரிசையில் மரியாதையுடன் நின்று கொண்டிருந்ததை, இப்போது நினைத்தாலும் நெகிழ்கிறேன்.

அகரமுதல்வன் குறிப்பிடுவதுபோல, தமிழ்ச் சிறுகதை மரபில் அரங்கநாதன் ஒரு முன்னோடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. "மா.அரங்கநாதனின் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்றுவிடுவதில்லை. உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்'' என்பது அசோகமித்திரனின் மதிப்பீடு.

தனது 20 வயதிலேயே பிரசண்ட விகடன் மூலம் ஒரு சிறுகதை எழுத்தாளராக அறிமுகமான மா.அரங்கநாதன், தமிழும் சைவமும் என்கிற பூர்விகத் தொடர்ச்சியை நவீனப் பரப்பில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு சாத்தியப்படுத்தியவர் என்பது அகரமுதல்வனின் கருத்து. தமிழின் சிறுகதை மரபில் மா.அரங்கநாதன் ஒரு முன்னோடி மட்டுமல்ல, எக்காலத்திலும் நிலைக்கும் கதைகளை வழங்கியவர்.

90 சிறுகதைகள், 2 நாவல்கள், 46 கட்டுரைகள் ஆகியவற்றுடன் முத்தாய்ப்பாக அவரது பேட்டியுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது "மா.அரங்கநாதன் படைப்புகள்'. முன்றில் இதழ்கள் தொகுப்பும், இந்தப் படைப்புகளின் தொகுப்பும் மா.அரங்கநாதன் என்கிற படைப்பாளியின் இலக்கியப் பங்களிப்புக்குக் கட்டியம் கூறும்!

மா.அரங்கநாதனின் ஆகச்சிறந்த படைப்பு எது? பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் கூறியதுபோல, "உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றிருக்கும் நீதியரசர் அரங்க.மகாதேவன்!'

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூரில் உள்ள அரசுக் கல்லூரியில், தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றுகிறார் முனைவர் அ.விஜயன் என்கிற கவிஞர் பெரியார் விஜயன். 2016-இல் வெளியான "எல்லாமே பூக்கள்தான்' கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு இப்போது வெளிவந்திருக்கிறது "விற்பனைக்குத் தாய்ப்பால்'. இந்தக் கவிதைத் தொகுப்பும், தன்விவர அறிமுகக் கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. அதிலிருந்து

ஒரு கவிதை –

ஊரெல்லாம் சுத்தமாக்கிச்

சாலையெல்லாம் அசுத்தமாக்கும்

குப்பை வண்டிகள்!

You may also like

© RajTamil Network – 2024