இன்று ஆவணி முதல் ஞாயிறு.. நாகராஜா கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை வழிபட்டனர்.

நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய தலங்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அவ்வகையில் ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி இன்று காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தீபாராதனையும், அபிஷேகமும் நடந்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை வழிபட்டு சென்றனர். நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெண்கள் வரிசையில் நின்று பால் மற்றும் மஞ்சள் பொடி தூவி வழிபட்டனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. மேலும் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நாகராஜா கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024