Sunday, September 22, 2024

‘இயற்கை மீதும் அன்பு காட்டுவோம்!’ – தமிழகத் தலைவர்கள் ஓணம் வாழ்த்து

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

‘இயற்கை மீதும் அன்பு காட்டுவோம்!’ – தமிழகத் தலைவர்கள் ஓணம் வாழ்த்து

சென்னை: கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், தமிழக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

இபிஎஸ்: பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ‘ஓணம்’ திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும். அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்தத் திருஒணத் திருநாளில், எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இதயங்கனிந்த “ஓணம்” திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குகிறேன்.

செல்வப்பெருந்தகை: உலகெங்கிலும் உள்ள மலையாளப் பெருமக்கள் எவ்வித மொழி, மத, ஜாதி, இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தமிழகத்தில் மலையாள மொழியை தாய்மொழியாகக் கொண்ட லட்சக்கணக்கான மக்கள் பல சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்தி மிகச் சிறப்பான வகையில் பணியாற்றி வருகின்றனர். மொழி ரீதியாக எந்த வேறுபாடும் இல்லாமல் சமத்துவம், சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை கடைபிடித்து, சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மேற்கொள்கிற முயற்சிகளில் வெற்றி பெற்று சிறப்புடன் வாழ்ந்து வருவது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

ஓணம் திருநாள் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவின் நிறைவில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்துகிற வகையில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, எவ்வித வேறுபாடுமின்றி பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள பெருமக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.

ராமதாஸ்: சொன்ன சொல் மாறாத மன்னன் மகாபலி மக்களைச் சந்திக்க வரும் திருவோணம் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஓணம் திருநாள் அன்பை வலியுறுத்துகிறது. ஓணம் திருநாள் நமக்கு வாழ்க்கைப் பாடமாகவும் திகழ்கிறது.

மகாபலி மன்னன் எவ்வாறு மக்கள் மீது அன்பு காட்டினாரோ, அதேபோல், இயற்கை மீதும் அனைவரும் அன்பு காட்ட வேண்டும் என்பது தான் ஓணம் சொல்லும் பாடம் ஆகும். மகாபலி மன்னனின் மண்ணான கேரளம் ஒவ்வொரு ஆண்டும் இயற்கைச் சீற்றங்களால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இயற்கையின் விளையாட்டை நம்மால் வெல்ல முடியாது. ஆனால், இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து கோபத்திற்கு ஆளாகாமல் தவிர்க்கலாம்.

அன்புமணி ராமதாஸ்: மக்களுக்காகவே வாழ்ந்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும், உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓணம் திருநாள் அறுவடைத் திருநாள். ஓணம் திருநாள் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கும் திருநாள். தமிழர்களின் கலாச்சாரமே எல்லோரும், எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்பது தான். ஓணம் திருநாள் வலியுறுத்துவதும் அதை தான். அந்த வகையில் தமிழ் பண்பாட்டிற்கும், ஓணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கியத்திலும் இது தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன.

கடவுளின் பூமி என்றும், இயற்கையின் சொர்க்கம் என்றும் போற்றப்படும் கேரளம் வளம் கொழிக்க வேண்டும்; கேரள மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான் எனது விருப்பம். ஓணம் திருநாள் மக்களுக்கு சொல்லும் செய்தியும் அதுதான். அந்த செய்தியை மதித்து, ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன்: அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத, பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒன்று கூடி மகிழும் இந்த திருநாளில், இல்லந்தோறும் அன்பும் அமைதியும் நிலவட்டும், மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024