Thursday, September 19, 2024

இரண்டு ஆறுகளின் நடுவில் வீற்றிருக்கும் இருக்கன்குடி மாரியம்மன்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

அகத்திய முனிவர், புண்ணிய நதிகளை திரட்டி அடைத்து வைத்திருந்த குடத்தை ஸ்ரீராமர் தன் அம்பால் உடைத்ததால் வைப்பாறு உருவானதாக புராண கதைகள் தெரிவிக்கின்றன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இருக்கன்குடி புண்ணிய தலத்தை சுற்றி இரு புறமும் வைப்பாறும், அர்ஜுன நதியும் ஓடுகிறது. இந்த இரு நதிகளின் பின்னணியில் புராண கதைகள் சொல்லப்படுகின்றன.

விதி வசத்தால் பாண்டவர்கள், காடு மலை என்று சுற்றி திரிந்து வாழும் நிலையில் இருந்தார்கள். இப்படி பல காடுகளில் சுற்றி வந்தபோது ஒரு மலையடிவாரத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்கள். களைப்பு தீர குளிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இதனால் அங்கே நீர் நிலைகளை தேடி சுற்றி சுற்றி பார்த்தார் அர்ஜுனன். ஆனால் அவர் கண்களுக்கு எட்டும் தூரம்வரை நீர் நிலைகள் இருப்பதற்கான சுவடே காணப்படவில்லை. இதனால் அர்ஜுனன், கங்கா தேவியை நினைத்து வணங்கி ஒரு அம்பால் பூமியை பிளந்தார். இதனால் அந்த இடத்தில் பீறிட்டு கிளம்பிய நதியாக உருவெடுத்தது. அந்த நதியில் பாண்டவர்கள் அனைவரும் நீராடினார்கள். அர்ஜுனனால் நதி உருவானதால் "அர்ஜுன ஆறு" என்று பெயர் பெற்றது.

சம்புகன் என்ற வேடனால் அயோத்தியில் வாழ்ந்த ஒருவன் இறந்தான். இதை கேள்விப்பட்ட ஸ்ரீராமர், வேடன் சம்புகனை கொன்றார். வேடனால் இறந்தவனை தன் சக்தியால் உயிர்ப்பித்தார் ஸ்ரீராமர். இறந்தவனுக்கு மீண்டும் உயிர் தந்தாலும், வேடன் சம்புகனை கொன்றதால் ஸ்ரீராமருக்கு பிரம்மஹத்திதோஷம் பிடித்துக்கொண்டது. அந்த தோஷத்தில் இருந்து விடும் சிவமலையில் இருக்கும் சிவபெருமானை நினைத்து, வணங்கி தவம் செய்து பாப விமோசனம் பெற்றார் ஸ்ரீராமர்.

மீண்டும் அயோத்திக்கு திரும்பி வரும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை பக்கமாக வந்து சேர்ந்தபோது மாலைப் பொழுது ஆனதால், நீராடி, சிவ வழிபாடு செய்ய வேண்டும் என்று எண்ணிய ஸ்ரீராமர், தண்ணீரை தேடினார். ஆனால் அந்த மலைபகுதியில் எங்கும் தண்ணீர் இல்லை. அப்போது அங்கு இருந்த ஒருவர் ஸ்ரீராமரிடம், "ராமா… அகத்திய முனிவர் புண்ணிய நதிகளை ஒன்று திரட்டி ஒரு குடத்தில் அடைத்து வைத்து, இந்த இடத்தில் புதைத்து வைத்திருக்கிறார் என்றார். இதனால் ஸ்ரீராமர், தன் அம்பால் புண்ணிய நதிகள் நிறைந்த குடம் புதைந்திருந்த இடத்தை தோண்டி அந்த குடத்தை உடைக்க, அதிலிருந்து தண்ணீர் வெள்ளமாக பாய்ந்து வெளியேறியது. அந்த புண்ணிய நதியின் பெயர்தான் வைப்பாறு என இன்று அழைக்கப்படுகிறது.

இந்த வைப்பாறு, பல ஊர்களை சுற்றி வந்து அர்ஜுன நதியோடு இணைகிறது. தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ஜுனன் ஆறு. இந்த இரு ஆறுகளும் கங்கை நதிக்கு இணையாக இருப்பதால் இந்த இடத்தில் அம்பாள் வீற்றிருக்க விரும்பினாள்.

ஸ்ரீராமரால் வெளிப்பட்ட வைப்பாறும், அர்ஜுனன் உருவாக்கிய அர்ஜுனன் ஆறும் கங்கை நதிக்கு இணையான புண்ணியம் நிறைந்து இருப்பதாலும், இந்த இரு ஆறுகளுக்கிடையே அம்மன் தோன்றியதால், இந்த அம்மனுக்கு 'இருகங்கை குடி' என்று பெயர் வைத்தார்கள். பிறகு மக்கள் இருகங்கைகுடியை, இருக்கன்குடி என்று அழைக்கத் தொடங்கி அதுவே அவ்வூர் பெயரானது.

You may also like

© RajTamil Network – 2024