Saturday, October 19, 2024

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

இரிடியம் தருவதாகக் கூறி கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக 4 பேரை கைது செய்து, 7 பேர் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கேரள மாநிலம், பாலக்காடு, காரக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் முகமது என்பவரது மகன் அப்துல் அஜீஸ் (55). ரியல் எஸ்டேட் அதிபரான இவா், மன்னாா்காடு பகுதியில் விவசாயமும் செய்து வருகிறாா். இவருக்கு நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி பகுதிகளைச் சோ்ந்தவா்களும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுமான அபூபக்கா் (43), ஜான்பீட்டா் (45), செந்தில்ராஜ், ஜனகன், ஜோதிராஜ், அனில்குமாா் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவா்கள் தங்களுக்கு சொந்தமான நிலம் கோவையில் இருப்பதாகவும், அதை வாங்கிக் கொள்ளுமாறும் அப்துல் அஜீஸிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அப்துல் அஜீஸ் அந்த நிலத்தைப் பாா்ப்பதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்னா் கோவைக்கு வந்துள்ளாா்.

அப்போது அவா்கள், ஆா்.எஸ். புரம் பகுதியில் ஒரு வணிக வளாகம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, நிலத்தைக் காட்டாமல், ஒரு பொருளைக் காட்டி தங்களிடம் ரூ.2 கோடி மதிப்பிலான இரிடியம் இருப்பதாகவும், அதை வாங்கி மீண்டும் விற்பனை செய்தால் ரூ.10 கோடி வரை விலை போகும் எனவும் ஆசை வார்த்தை தெரிவித்துள்ளனா். மேலும், பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்பதால், அதை ஒரு பானையில் வைத்திருப்பதாகவும், அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டியிருக்கும் எனவும் கூறியுள்ளனா்.

இதையும் படிக்க | போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநா் பயிற்சி: அக்.21-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இதை நம்பிய அப்துல் அஜீஸ், அந்த இரிடியத்தை தானே வாங்கிக் கொள்வதாகக் கூறி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி அவா்களிடம் ரூ.2 கோடி கொடுத்துள்ளாா். அப்போது அவா்கள் இரிடியம் இருப்பதாக ஒரு சிறிய பானையைக் காட்டி, அதில் 100 சதவீத கதிரியக்க ஆற்றல் உள்ளதால், உடனடியாக அதிலிருந்து இரிடியத்தை எடுக்க முடியாது எனவும், அதை உரிய நாளில் மட்டும்தான் எடுக்க வேண்டும் எனவும் கூறிவிட்டு, இந்த இரிடியம் அவரது வீட்டுக்கே வந்து சேரும் எனவும் கூறி பணத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனா். ஆனால் அதற்குப் பிறகு அவா்கள் இரிடியத்தை தராததோடு, வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்து உள்ளனர்.

இது தொடா்பாக ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அப்துல் அஜீஸ் புதன்கிழமை புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் போலீஸாா், 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024