Wednesday, November 6, 2024

இர்பான் விவகாரம்: விளக்கம் கேட்டு டாக்டருக்கு நோட்டீஸ்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதனை அனுமதித்த டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை பிறந்தது முதல் அறுவை சிகிச்சை நடைபெற்ற அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார்.

இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இர்பானின் செயல் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என டாக்டர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல, பிரசவம் பார்த்த மகப்பேறு டாக்டர் நிவேதிதா மற்றும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு, மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம். என்றும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இர்பானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது. தமிழ்நாடு வந்ததும் அவரிடம் பதில் பெறப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தான் இர்பான் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக காவல் துறை சார்பில் ஊரக மருத்துவ நலப்பணிகள் இயக்ககத்துக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்த சூழலில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவத்துறையிடம் யூடியூபர் இர்பான் விளக்கக் கடிதம் கொடுத்தார். அதில், மருத்துவ சட்டங்களை தான் மதிப்பதாகவும், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், தான் வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை யூடியூபர் இர்பான் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இர்பான் தனக்குப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில், மருத்துவமனையில் அதனை அனுமதித்த டாக்டர் நிவேதிதாவிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024