Friday, September 20, 2024

இலக்கியமும், ஆசையும்..!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

இலக்கியமும், ஆசையும்..!கோழிக்கோடு இலக்கிய நகரம்: யுனெஸ்கோவின் அங்கீகாரம்இலக்கியமும், ஆசையும்..!

கைவினை, நாட்டுப்புறக் கலைகள் வடிவமைப்பு, திரைப்படம், உணவு, இலக்கியம், ஊடகக் கலைகள், இசையில் பராம்பரிய நகரங்களைத் தேர்ந்தெடுத்து, யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் நெட்ஒர்க் (யு.சி.சி.என்.) என்ற அமைப்பு கௌரவிக்கிறது. தற்போது கோழிக்கோடை இலக்கியங்களின் நகரமாகவும், குவாலியரை ஆசைகளின் நகரமாகவும் அறிவித்துள்ளது. இதுவரை 350 நகரங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த இரு நகரங்களின் சிறப்புகள்தான் என்ன?

கோழிக்கோடு: கேரளத்தின் தெற்கு மலபாரில் உள்ள ஒரு கடற்கரை நகரம். கோயில் கோட்டை என்பது அதன் பொருள்.

தமிழில் முன்பு கள்ளிக்கோட்டை.

நூறு சதவீதம் படிப்பறிவு பெற்ற நகரம். எம்.டி.வாசுதேவன் நாயர் இந்த ஊரில் புத்தகத் திருவிழாக்களை நடத்தி, பொதுமக்களை புத்தகங்களை வாங்கத் தூண்டியவர். கேரள சாகித்திய அகாதெமியை வென்ற எஸ்.கே. பொற்றேகாட்டின் சிலையை எம்.ஆர் .தெருவில் இன்றும் உள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 500 நூலகங்கள் உள்ளன. பி.வல்சாலா, அக்பர் கக்காட்டில், புனத்தில் குஞ்சப்துல்லா, வைக்கம் முஹம்மது பஷீர் போன்ற பிரபல எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல், பல திரைப்படங்கள், நாடகங்களின் நிபுணர்களும் இந்த ஊர்தான்.

கேரளத்தில் எழுத்தாளர்களுக்கு தரப்படும் கெளரவமே அலாதி. எழுத்தாளர்களின் இருப்பிடம், நினைவிடம் சென்று தரிசிக்க ஏதுவாய் வாசகர்கள், அபிமானிகளுக்கு தனி சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.

குவாலியர்: மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரானது மன்னர்களுக்கு பிரபலமான இடம். நாட்டின் மிகப் பெரிய இசை விழாக்களில் ஒன்றான தான்சேன் விழா இங்குதான் நடக்கிறது.

ராஜா மான் சிங், சிந்தியா போன்ற மன்னர்களின் ஆட்சியில் குவாலியரில் கரானா இசை செழித்து வளர்ந்தது. கரானா- கவ்வாலி பாடல்களின் தாக்கம் கொண்டது.

ராஜா மான் சிங்கின் தாத்தா, ராஜா துங்கரேந்தர்சிங் சிறந்த இசை பிரியர். ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை பல்வேறு கரானாக்களாக பிரிக்கப்படும் முன்பே குவாலியரில் முதல் சரியான கரானா உருவாகி பிரபலம் அடைந்தது. ஆக, குவாலியார் கரானா மிக மிகப் பழையது.

கயால் பாடப்படுவது குவாலியர் கரானாவால்தான். தாத்தாவை பின்பற்றி பேரன் மான் சிங் குவாலியர் கரானாவை ஊக்குவித்து தன் தர்பாரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்த இசை சார்ந்து ஹிந்தியில் விஷ்ணுவை புகழ்ந்து பல பாடல்களை எழுதி, பாட வைத்து பிரபலப்படுத்தினார். அத்துடன் இந்துஸ்தானி இசையை கிளாசிக்கல் வகையாகவும் மாற்றினார். இந்த இசையில் விற்பன்னராகத் திகழ்ந்தவர் தான்சென். அக்பர் தான்சேன்னை தன் சபையில் இணைய வேண்டினார். முதலில் மறுத்தாலும் பிறகு இணைந்தார்.

அபுல்ஃபாசலின் என் இ அக்பரி என்ற நூல்36 இசைக்கலைஞர்களைப் பற்றி கூறுகிறது, அதில் 15 பேர் குவாலியரைச் சேர்ந்தவர்கள். உஸ்தாத் ஹபீஸ் அலிகான், உஸ்தாத் அம்ஜத் கான், பண்டிட் பீம்சென் ஜோஷி போன்ற பிரபலங்கள் குவாலியர் இசையைச் சேர்ந்தவர்கள்.

-அர்ஜுன். ஜி, ராஜி ராதா.

You may also like

© RajTamil Network – 2024