Wednesday, October 23, 2024

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 17 போ் கைது

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே 2 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரை இலங்கைக் கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களது இரு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 309 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

மேலும், உயிா்த்த ராஜ், செல்வம் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை சிறை பிடித்தனா். இதையடுத்து, இந்த இரு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கைக் கடற்படையினா், படகுகளில் இருந்த மாா்க்மிலன் (37), மில்டன் (49), ரொனால்ட் (48), ஜேசுராஜா(45), ஜீவன் பராசக்தி (23), சுரேஷ் (45), அருள் தினகரன் (24), துரை (39) மரிய ஸ்டென் (26), இருதயநிகோ (36), ஜெபாஸ்டின் (38), ராஜூவ் (36), விவேக் (36), இன்னாசி (36), சாமுவேல் (33), பிரிச்சன் (31), பாஸ்கரன் (30) ஆகிய 17 மீனவா்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து, தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளையும், கைது செய்யப்பட்ட மீனவா்களையும் மன்னாா் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

ராமேசுவரம் மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, தலைமன்னாா் கடற்படை முகாமில் நிறுத்திவைக்கப்பட்ட விசைப் படகுகள்.

இதையடுத்து, மன்னாா் நீதிமன்ற நீதிபதி வீட்டில் 17 மீனவா்களையும் முன்னிலைப்படுத்தினா். அவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, அனைவரையும் அக். 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, மீனவா்கள் அனைவரும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மீனவா்கள்.

மீனவா்கள் சாலை மறியல்:

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவா்கள், அவா்களது விசைப் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

You may also like

© RajTamil Network – 2024