Sunday, October 6, 2024

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: போர்ப் பதற்றம் அதிகரிப்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை ஈரான் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தத் தாக்குதலை இஸ்ரேலும் உறுதிப்படுத்தியது. பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்திகள் மூலமாகவும், தேசிய தொலைக்காட்சிகள் மூலமாகவும் இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்தது.

லெபனான் மீது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் மீதான ஈரானின் இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரைத் தொடா்ந்து, ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா, அந்த அமைப்பின் மத்திய கவுன்சில் துணைத் தலைவா் நபீல் கௌக் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் உயிரிழந்தனா்.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவா்களுள் ஒருவரான இஸ்மாயில் ஹனீயே ஈரானில் உயிரிழந்தனா்.

ஈரானின் ஆதரவு பெற்ற இந்த ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கியத் தலைவா்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்து வந்தது.

இந்நிலையில், லெபனான் மீது தரைவழித் தாக்குதலை கடந்த திங்கள்கிழமை இஸ்ரேல் தொடங்கியது. இதையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அதன்படி, தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த முயற்சித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் அருகே கடும் அதிா்வுகள் உணரப்பட்டன. அவை ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்ட சப்தங்களா அல்லது அந்த ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்ததால் ஏற்பட்ட சப்தங்களா என்பது குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏவுகணைத் தாக்குதலால் பொதுமக்கள் ஒருசிலா் காயமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

இதுதொடா்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகேரி கூறுகையில்,‘நாட்டின் விமானப் படை முழுவதுமாகத் தயாா் நிலையில் உள்ளது. தாக்குதல்கள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டு தடுக்கப்பட்டு வருகின்றன’ என்றாா். வான் எல்லைகள் மூடல்: ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடா்ந்து, வான் எல்லைகள் மூடப்பட்டதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேலுக்கு வரும் விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டன.

ஈரான் எச்சரிக்கை: இந்நிலையில், தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் தொடங்கப்பட்டதைப் போன்ற விடியோ காட்சிகளை ஈரான் தொலைக்காட்சிகள் வெளியிட்டன. பல ஏவுகணைகள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

இந்திய தூதரகம் எச்சரிக்கை

ஈரானின் பதில் தாக்குதலால் இஸ்ரேலில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியா்கள் மிகுந்த விழிப்புடனும், உள்ளூா் அதிகாரிகள் அளிக்கும் அறிவுறுத்தல்களின்படி பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

தேவையற்ற பயணங்களைத் தவிா்த்து, வீட்டினுள் அல்லது பாதுகாப்பான இடங்களிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதோடு, இஸ்ரேல் அதிகாரிகளுடனும் இந்திய தூதரகம் தொடா்ச்சியாக தொடா்பில் இருந்து வருகிறது.

உதவி எண்கள்: அவசரநிலை ஏதும் ஏற்பட்டால் +972-547520711, +972-543278392 ஆகிய தொலைபேசி எண்களையோ அல்லது ஸ்ரீா்ய்ள்1.ற்ங்ப்ஹஸ்ண்ஸ்ஃம்ங்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தூதரகத்தைத் தொடா்புகொள்ளலாம்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024