இஸ்லாமிய பெண்கள் ஆண்களுடன் கை குலுக்குவது தவறா? உயர்நீதிமன்றம் கேள்வி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இஸ்லாமிய பெண்மணியொருவர் வெளிநபருடன் கை குலுக்குவதால் இஸ்லாமிய மரபுகளை அவர் மீறிவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியுமா? என நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

கோழிக்கோட்டில் உள்ள கரந்தூர் மார்காஸ் சட்டக்கல்லூரியில் பயின்ற இஸ்லாமிய மாணவி ஒருவர், தனது கல்லூரியில் சம்பவத்தன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அப்போதைய நிதியமைச்சர் தாமஸ் ஐஸாக்குடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது அந்த மாணவிக்கு அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டியுள்ளார். இந்நிகழ்சியின்போது, அமைச்சருடன் கை குலுக்கி வாழ்த்து பெற்றுள்ளார் அந்த மாணவி.

இந்த நிலையில், இஸ்லாமிய மாணவி வெளிநபர் ஒருவருடன் கை குலுக்கியிருப்பதை விமர்சித்து சமூக வலைதளங்களில் அவதூரு கருத்து பரப்பப்பட்டுள்ளது. வெளிநபரை தொட்டுப் பேசியதன் மூலம், இஸ்லாமிய மதத்தினர் கடைபிடிக்கும் மரபுகளை அந்த மாணவி மீறிவிட்டதாக சமூக வலைதளங்களில் அந்த மாணவி குறித்து அவதூறான வகையில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளால் தானும் தனது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவி மீது குற்றஞ்சுமத்தி சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்ட நபர் மீது மாணவி தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பெண் தரப்பினர் தன் மீது சுமத்தியுள்ள மேற்கண்ட புகார்களை ‘சட்டப்படி குற்றமாகக் கருத இயலாது’ என்று அந்த நபர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வெளிநபரை தொட்டுப் பேசியதன் மூலம் இஸ்லாமிய மரபுகளை அந்த பெண்மணி மீறிவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று கேள்வியெழுப்பியுள்ளது.

உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், ’இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடைய சுய மத நம்பிக்கை மீதான சுந்திரம் மீறப்பட்டுள்ளதாக துணிச்சலுடன் புகாரளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் உரிமையை அரசமைப்பு பாதுகாக்கும். எந்தவொரு மத நம்பிக்கையும், அரசமைப்பைவிட மேலானதல்ல, இந்திய அரசமைப்பே உச்சபட்சமானது’ என்று மனுவை விசாரித்த நீதிபதி பி.வி. குன்னிகிருஷ்ணன் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் இந்த விவகாரத்தை கீழமை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்ள அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கவும் கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024