Saturday, September 21, 2024

ஈரானின் அடுத்த அதிபர் ஜலீலியா, பெசெஸ்கியனா..? இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

முதல் சுற்று தேர்தல் முடிவில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்களான மசூத் பெசெஸ்கியன் மற்றும் சயீது ஜலீலி ஆகிய இருவருக்கும் இடையிலான இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது.

தெஹ்ரான்,

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, கடந்த மாதம் 19-ந்தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த 28-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 40 சதவீத வாக்குகள் அதாவது, 2.55 கோடி வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக முன்னாள் நிதி மந்திரி மசூத் பெசெஸ்கியன் 42.5 சதவீத வாக்குகள் பெற்றார். சயீது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இந்த முடிவுகளின்படி மசூத் பெசெஸ்கியன் அதிகபட்ச வாக்குகளை பெற்றிருந்தாலும், ஈரான் நாட்டின் சட்டத்தின்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெற, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு பெறாவிட்டால், முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்களுக்கு இடையே 2-ம் சுற்று தேர்தல் நடத்தப்படும்.

அந்த வகையில், அதிகபட்ச வாக்குகளைப் பெற்று முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வேட்பாளர்கள் மசூத் பெசெஸ்கியன் மற்றும் சயீது ஜலீலி ஆகிய இருவருக்கும் இடையிலான இரண்டாம் சுற்று தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். நாளை மதியம் அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும்.

You may also like

© RajTamil Network – 2024