ஈரானில் அதிபர் பதவிக்கான மனு தாக்கல் தொடங்கியது

by rajtamil
0 comment 39 views
A+A-
Reset

ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவோர் மனுக்களை தாக்கல் செய்ய 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 11-ம் தேதி வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

தெஹ்ரான்:

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கடந்த 19-ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து துணை அதிபர் முகமது மாக்பர் (வயது 68), இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப பதிவு (மனு தாக்கல்) இன்று தொடங்கியது. விண்ணப்ப பதிவுக்கு 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 11-ம் தேதி வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

நாட்டின் உச்ச தலைவரால் நியமிக்கப்பட்ட 12 சட்ட வல்லுநர்களை கொண்ட கார்டியன் கவுன்சில் விண்ணப்பங்களை சரிபார்த்து வேட்பாளர்களை இறுதி செய்து அறிவிக்கும். அதன்பின்னர் ஜூன் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

எம்.பி.க்கள் முஸ்தபா கவாகெபியன் மற்றும் முகம்மத்ரசா சபாகியன் ஆகியோர் உள்துறை அமைச்சகத்திடம் தங்கள் மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழமைவாத தலைவரான சயீத் ஜலிலி, முன்னாள் அதிபர் அக்பர் ஹாஷமி ரப்சஞ்சனியின் மகன் மோசென் ஹாஷமி ரப்சஞ்சனி ஆகியோரும் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், தற்காலிக அதிபர் முகமது மாக்பர், முன்னாள் சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோரும் போட்டியிடலாம் என தெரிகிறது.

ஈரான் தேர்தல் சட்டத்தின்படி, வேட்பாளர்கள் 40 முதல் 75 வயதிற்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024