ஈஷா யோகா மைய வளாகத்தில் சமூகநலத் துறை, காவல் துறை அதிகாரிகள் விசாரணை

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

ஈஷா யோகா மைய வளாகத்தில் சமூகநலத் துறை, காவல் துறை அதிகாரிகள் விசாரணை

கோவை: நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வழக்குகள் தொடர்பாக ஈஷா யோகா மைய வளாகத்தில் சமூகநலத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

கோவை மாவட்டம் பூண்டியை அருகே ஈஷா யோகா மையம் உள்ளது. சத்குரு இதன் நிறுவனராக உள்ளார். ஈஷா யோகா மையத்தின் சார்பில், பல்வேறு வித யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகியை தரிசிக்கவும், தியானலிங்கத்தை தரிசிக்கவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் பேராசிரியர் காமராஜ். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “எனது மகள்கள் லதா, கீதா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையத்தில், யோகா கற்கச் சென்றனர்.

அதன் பின்னர், அவர்கள் அங்கயே தங்கி விட்டனர். அங்கு அவர்களை தனி அறையில் அடைத்து துன்புறுத்தல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் நானும், எனது மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால் தான், எனது மகள்களுடன் பேச முடியும் என அவர்களது தரப்பில் கூறப்படுகிறது. எனது மகள்களை மீட்டுத் தர வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (செப்.30) நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது, லதா, கீதா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது வாதங்களை தெரிவித்தனர். தொடர்ந்து, ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என ஆய்வு செய்து, வரும் 4-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவை மாவட்ட காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று (அக்.1) காலை முதல் ஈஷா யோகா மைய வளாகத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முன்னிலையில், சமூக நலத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மொத்தம் 6 குழுக்களாக பிரிந்து ஈஷா வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை தொடங்கிய இந்த விசாரணை மாலை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஈஷா யோகா மையத்தில் இதுவரை தங்கியிருந்தவர்கள் எத்தனை பேர், பெண்கள் எவ்வளவு பேர் துறவறம் பூண்டுள்ளனர். வெளிநாட்டினர் எத்தனை பேர் உரிய ஆவணத்துடன் தங்கியுள்ளனர். இந்த மையத்துக்கு வந்து மாயமானவர்கள் யாராவது உள்ளனரா என்பது போன்ற தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை 2-வது நாளாக நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024