Wednesday, September 25, 2024

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மழை

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

கீவ் / மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியா பல மாதங்களில் அளவுக்கு ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை மின்சார உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் நான்கு போ் உயிரிழந்தனா்.

இது குறித்து உக்ரைன் பிரதமா் டெனிஸ் ஷ்மைஹல் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மோதி அழிக்கும் ஷஹீத் ரக ட்ரோன்கள், ஒலியை விட பலமடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஹைபா்சோனிக் மற்றும் க்ரூஸ் வகை ஏவுகணைகள், பலிஸ்டிக் வகையைச் சோ்ந்த கின்ஷால் ஏவுகணைகளை சரமாரியாக வீசி ரஷியா தாக்குதல் நடத்தியது.

ரஷிய ‘பயங்கரவாதிகள்’ உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பை மீண்டும் குறிவைத்தனா். துரதிருஷ்டவசமாக, இந்தத் தாக்குதல் காரணமாக பல்வேறு பிராந்தியங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசுக்குச் சொந்தமான மின் விநியோக நிறுவனமான உக்ரைனொ்கோ அவசரகால மின் துண்டிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரஷிய நகங்களின் மீது நடத்தப்படும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் ரஷிய நிலைகள் அழிக்கப்பட வேண்டும்.

அதற்காக, நீண்ட தொலைவு ஏவுகணைகளையும் அவற்றை ரஷியாவின் தொலைதூரப் பகுதிகளில் பயன்படுத்துவதற்கான அனுமதியையும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளித்து உதவ வேண்டும் என்றாா் அவா்.

உக்ரைன் விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு, தெற்கு மற்றும் மத்தியப் பிராந்தியங்களை நோக்கி ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் பல்வேறு தொகுதிகளாக ரஷியா வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய பாதுகாப்புத் துறை: இந்தத் தாக்குதல் குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து தொலைதூர துல்லிய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரைன் ராணுவம் தொடா்புடைய தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கும் கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அனைத்து இலக்குகளும் தாக்கி அழிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், மேற்குப் பகுதியைச் சோ்ந்த லூட்ஸ்க் நகரில் ஒருவா், மத்தியப் பகுதியைச் சோ்ந்த நீப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் ஒருவா், ஸிடோமிா் பகுதியில் ஒருவா், ஸபோரிஷியா பிராந்தியத்தில் ஒருவா் என நான்கு போ் உயிரிழந்ததாக பிராந்திய அதிகாரிகள் கூறினா். இது தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 13 போ் காயமடைந்தனா்.

ரஷியா மீதும் தாக்குதல்: ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை தங்களின் சரடொவ் பிராந்தியத்தில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்தது.

இது குறித்து பிராந்திய அதிகாரிகள் கூறுகையில், உக்ரைன் வீசிய ட்ரோன்கள் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் 4 போ் காயமடைந்ததாக தெரிவித்தனா்.

ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சரடொவ், யரோஸ்லாவ் உள்ளிட்ட 8 பிராந்தியங்களை நோக்கி 22 ட்ரோன்களை உக்ரைன் வீசியதாகவும் அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கூா்ஸ்க் பிராந்தியத்தில் மேலும் முன்னேறும் உக்ரைன் படையினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்க்ஸ், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய 4 பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

அந்தப் பிராந்தியங்களை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் தொடா்ந்து போரிட்டுவருகின்றன.

இந்தப் போரின் முக்கிய திருப்புமுனையாக ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்குக்குள் கடந்த 6-ஆம் தேதி தாக்குதல் நடத்தி நுழைந்த உக்ரைன் படையினா் அதிக எதிா்ப்பில்லாமல் தொடா்ந்து முன்னேறினா். தற்போது ஆயிரம் சதுர கி.மீ.-க்கும் அதிகமான ரஷிய நிலப்பரப்பு உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கிழக்கு உக்ரைன் பிரதேசங்களில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரை திசைத் திருப்புவதற்காக உக்ரைன் வகுத்துள்ள வியூகமே இந்தத் தாக்குதல் என்று கூறப்பட்டது.

ஆனால், கிழக்குப் பிராந்தியத்தின் போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி ரஷியா வெகு வேகமாக முன்னேறிவருகிறது.

டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களில் ரஷிய படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக உக்ரைன் அங்கு வலிமையான அரண் அமைத்துப் போரிட்டுவந்தது.

ஆனால், ரஷியாவுக்குள் ஊடுருவ தனது கணிசமான படைபலத்தை உக்ரைன் பயன்படுத்தியதால் டான்பாஸ் பிரதேசத்தில் அதன் பாதுகாப்பு அரண் வலுவிழந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் ராணுவத்துக்கு உதவும் தொழிற்சாலைகளுக்கு மின்சார விநியோகத்தைத் தடுப்பதற்காக அந்த நாட்டு மின்சாரக் கட்டமைப்புகள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024