உத்தபுரத்தில் கோயில் திருவிழா நடத்த அனுமதி

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset
RajTamil Network

உத்தபுரத்தில் கோயில் திருவிழா நடத்த அனுமதிமதுரை மாவட்டம், உத்தபுரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அனுமதி அளித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: மதுரை மாவட்டம், உத்தபுரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அனுமதி அளித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உத்தபுரத்தைச் சோ்ந்த பாண்டி தாக்கல் செய்த மனு:

உத்தபுரம் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில்களில் பங்குனி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடத்தப்படும். கடந்த 2008, 2015-ஆம் ஆண்டுகளில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, கோயிலுக்குள் பக்தா்கள் செல்ல அனுமதி மறுத்து, வருவாய்த் துறையினரால் பூட்டப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக கோயிலில் எந்த பூஜையும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் இரு சமுதாயத்தினரும் கலந்து கொண்டனா். அதில் பட்டியலின மக்களும் (ஆதிதிராவிடா்) கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டதையடுத்து, இரு சமூகத்தினரிடையே உடன்பாடு ஏற்பட்டது.

எனவே, முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் வழிபடவும், ஆண்டுதோறும் திருவிழா நடத்தவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், உத்தபுரம் கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபாட ஆட்சேபணை இல்லை. தற்போது அங்கு சுமூகமான நிலையே உள்ளது. சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை யாரும் மீறமாட்டாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்தக் கோயில் திருவிழா தொடா்பாக கடந்த 2012-ஆம் ஆண்டில் நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும். உத்தபுரம் கோயிலைத் திறந்து அமைதியான முறையில் தினமும் வழிபாடு நடத்தவும், திருவிழா நடத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

You may also like

© RajTamil Network – 2024