உத்தரபிரதேசத்தில் கோர விபத்து: வீட்டுக்கு வெளியே உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது மணல் லாரி கவிழ்ந்தது – 8 பேர் உயிரிழப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 42 views
A+A-
Reset

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் மல்லவன் நகரை சேர்ந்தவர் அவதேஷ் (வயது 40). இவர் அங்கு சாலையோரமாக குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் அவதேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக்கு வெளியே படுத்து உறங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவதேஷ் வீடு அருகே உள்ள சாலையில் மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்கு வெளியே தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்தது.

இதில் அவதேஷ் மற்றும் குடும்பத்தினர் மண்ணில் புதையுண்டனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மணலை அகற்றி அவர்களை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அவர்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை.

இதனையடுத்து புல்டோசர் வரவழைக்கப்பட்டு மணல் அள்ளப்பட்டது. அதை தொடர்ந்து, அவதேஷ், அவரது மனைவி சுதா (35) மற்றும் அவர்களது 3 குழந்தைகளான லல்லா (5), சுனைனா (11), புட்டு (4) மற்றும் அவதேசின் மைத்துனரான கரண் (35), அவரது மனைவி ஹீரோ (30) மற்றும் அவர்களின் மகள் கோமல் (5) ஆகிய 8 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் 5 வயது பச்சிளம் குழந்தை ஒன்று படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டுக்கு வெளியே உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024