Monday, October 14, 2024

உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின்தான் பொறுப்பு: இபிஎஸ்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

விமானப் படையின் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமானப் படையின் 92- ஆவது ஆண்டு விழா சாகச நிகழ்ச்சியைப் பாா்வையிட வந்தவா்களில் ஐந்து போ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனா்.

நெரிசலில் சிக்கி 240-க்கும் மேற்பட்டோா் மயங்கி விழுந்தனா். அவா்களில் 93 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இதையும் படிக்க : விமானப் படை சாகசம்: கனிமொழி, கூட்டணி கட்சியினர் விமர்சனம்!

ஸ்டாலின்தான் பொறுப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டி பகுதியில் ஜவுளிக் கடையை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுடன் பேசுகையில்,

“அரசு என்பது மக்களைப் பாதுகாக்க வேண்டும், அதுதான் கடமை. உளவுத் துறையின் மூலம் எத்தனை பேர் நிகழ்ச்சியைக் காண வருவார்கள் என்று தகவலை பெற்று, அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு அம்சங்களை செய்து தர வேண்டியது அரசின் கடமை. இதனை அரசு செய்யத் தவறியது.

இந்த உயிரிழப்புக்கான முழுப் பொறுப்பும் ஸ்டாலின்தான் ஏற்க வேண்டும். ஏனென்றால், விமான சாகச நிகழ்ச்சியை வந்து காண அறிவிப்பு வெளியிட்டது முதல்வர் ஸ்டாலின்தான். அழைப்பு விடுத்துவிட்டு ஏற்பாடுகளை செய்யத் தவறிய அரசும், ஸ்டாலினும்தான் உயிரிழப்புக்கும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கும் பொறுப்பு” எனத் தெரிவித்தார்.

நிர்வாகச் சீர்கேடு

எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“சென்னை வான் சாகச நிகழ்ச்சிக்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன, ஆனால் தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு அரசுக்கு என் கடும் கண்டனங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024