உறவுகளும் நினைவுகளும்… மெய்யழகன் – திரை விமர்சனம்!

நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவான மெய்யழகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சென்னையிலிருக்கும் அருள்மொழி வர்மன் (அரவிந்த் சாமி) சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமா என்கிற குழப்பத்தில் இருக்கிறார். உறவினர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவம் கொடுத்த வலி 20 ஆண்டுகள் கடந்தும் தன் மனதிலிருந்து இன்னும் அகலாததை நினைத்து வெதும்புகிறார். குடும்பத்தினரின் அழுத்தத்தால் திருமணமாகவுள்ள நபர் தன்னுடைய முக்கியமான உறவு என்பதைப் புரிந்துகொண்டு அரை மனதாகத் தஞ்சாவூர் செல்கிறார்.

பழைய நினைவுகளை மீட்டபடி தஞ்சை வீதிகளில் அலைந்து திரிந்து திருமணம் நடக்கவுள்ள நீடாமங்கலம் ஊருக்குக் பேருந்தில் பயணமாகி திருமண மண்டபத்தை அடைந்ததும், திடீரென ‘அத்தான்’ என்கிற குரல் அருள்மொழிக்கு அறிமுகமாகிறது. அருள்மொழி எங்கு சென்றாலும் கூடவே வருகிறது ‘அத்தான்’ குரல். ஒருகட்டத்தில் அருள்மொழி சலிப்படைந்தாலும் இவ்வளவு அன்பாக, பாசமாக இருக்கிறானே… எதையும் மறக்காமல் நினைவுகளை மீட்டுத்தருகிறானே என கார்த்தியின் கதாபாத்திரத்தைக் கண்டு அருள்மொழி தவிக்கிறார். யார் இவன்? சின்ன வயதில் பார்த்திருக்கிறோமா? இவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்விகளாலும் நினைவுகளாலும் உருவாகியிருக்கிறது மெய்யழகன்.

96 படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் என்ன ஆனார் எனப் பலரும் தேட ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து படம் இயக்குகிறார் என செய்தி வெளியானபோதே படத்திற்கான புரமோஷன் துவங்கியது. 96 போல இந்த முறையும் ஆர்ப்பாட்டமில்லாமல் அதேநேரம் பழைய நினைவுகளைத் தொட்டு அதில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடும் கதையாக மெய்யழகனைக் கொண்டு வந்திருக்கிறார்.

தமிழும் நிலமும் உறவும் நினைவுமே படத்தின் மையம். முதல் காட்சியிலேயே பெரிய நந்தி சிலையைக் காட்டுகிறார்கள். சிவனுக்கு நந்திபோல் அருள்மொழி வர்மனுக்கு மெய்யழகனும், மெய்யழகனுக்கு அவனுடைய காளை என்றும் உறவுகளின் நீட்சியை அழகியல் தன்மையுடன் இயக்குநர் பிரேம் குமார் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிறந்து, பால்யத்தை எதிர்கொண்ட ஊரின் திசைகளை பல ஆண்டுகள் கழித்துத் தேடும் ஒருவனின் நினைவாக உறவுகளின் மேன்மையை அழகாகக் கையாண்டிருக்கிறார்.

அருள்மொழி வர்மனும் மெய்யழகனும்…

அணைக்கட்டில் கார்த்தியும் அரவிந்த் சாமியும் மதுவை ஒரு பானைக்குள் ஊற்றி நிலவு வெளிச்சத்தில் பேசிக்கொள்ளும் வசனங்கள் தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகளில் ஒன்றாக இருக்கும். பழைய பாணி தஞ்சை வீடு, சைக்கிள், கோவில் யானை, நல்ல பாம்பு என வீடும் அதைச் சுற்றியிருக்கும் அழகான விஷயங்களால் உறவுகளில் நம்பிக்கையிழந்த அருள்மொழி வர்மன் அடையும் தடுமாற்றங்களை உணர்ச்சிப்பூர்வமாக திரைக்குக் கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் கார்த்தி. கமர்சியலாகவும் ரசனையான கதைகளைக் கேட்டு நடிக்கக் கூடியவர். அதேநேரம், கமர்சியலைத் தாண்டி ஒரு அழகான கதையில் இருக்க வேண்டும் என விரும்பக்கூடியவரும் கூட. தோழா ஒரு உதாரணம். அப்படி, மெய்யழகனில் விளையாடியிருக்கிறார். காட்சிக்கு காட்சி கள்ளமில்லாத ஆன்மாவாக அவர் பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கின்றன.

முக்கியமாக, சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்ட காட்சி ஒன்றில், இரத்த உறவற்ற சொந்தங்கள் குறித்து பேசியபடி அழும் இடங்களில் ஒவ்வொரு மூலையிலிருந்தும் விசிலொலிகள் எழுகின்றன. இப்படத்திற்காக கார்த்திக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். ரசிகர்களுக்கு, ‘விருந்து கொடுக்கும்’ வணிக குட்டிக்கரணங்களை அடிக்காமல் முழுமையாகத் தன்னை கதைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

அடுத்ததாக எனச் சொல்ல முடியாத அளவிற்குப் படத்தின் தூணாக இருக்கிறார் அரவிந்த் சாமி. ஆத்திரப்படும் காட்சியிலும் கண்ணீர் சிந்தும் காட்சியிலும் எதார்த்தமான நடிப்பால் ஈர்க்கிறார். சொந்தங்களை வெறுப்பதும் அதை நினைத்து உடைவதுமாக அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தை தாங்கியிருக்கிறார். அவருடைய முதுமையில் நினைத்துப் பார்த்து மகிழும் படமாக இதில் தனக்கான இடத்தை நிரப்பியிருக்கிறார். இருவருக்கும் இடையே நிகழ்வது வெறும் நடிப்பு மட்டுமல்ல. ஒருவகையான உண்மை.

மெய்யழகன்…

நடிகர்கள் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, ஜெயப்பிரகாஷ் என பலரும் தங்களுக்கான காட்சிகளில் மிகையில்லாத எதார்த்தமான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர்.

96 படத்தில் கோவிந்த் வசந்தா – கார்த்திக் நேத்தா கூட்டணியின் மேஜிக் இப்படத்திலும் கைகொடுத்திருக்கிறது. டெல்டா கல்யாணம், போறேன் நான் போறேன், யாரோ இவன் யாரோ பாடல்கள் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு வலு சேர்த்திருக்கின்றன. பின்னணி இசையும் , கமல்ஹாசன் பாடிய, ’இவன் யாரோ’ பாடலின் வரிகளும் பெரிய பலம். எடிட்டிங், கலைத்துறை என பலரும் தங்களின் பணியை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

நீளத்தைக் குறைத்திருக்கலாம். 30 வினாடிகள் ரீல்ஸ் உலகே சுவாரஸ்யத்தை இழக்கும் சூழலில் 3 மணி நேர திரைப்படத்தில் ரசிகர்களைக் சுலபமாக கவர முடியாது. இப்படத்தின் குறையும் நிறையும் நீளம்தான். உரையாடல்களில் ஈர்ப்புக்கொண்டவர்களுக்கு ஏன் முடிந்தது என்கிற எண்ணத்தையும் பேசிக்கொண்டே இருக்கிறார்களே என நினைப்பவர்களுக்கு சோர்வையும் கொடுத்துவிடும் தன்மையுடனே படம் உருவாகியிருக்கிறது. கார்த்திக்கும் அர்விந்த் சாமிக்கும் இடையான உறவிற்கு திருப்பத்தையோ பெரிய அழுத்தத்தையோ கொடுத்திருக்கலாம்.

சூர்யா சொன்னார், ‘இப்படம் அபூர்வமான சினிமா. இதன் வணிக வெற்றியைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்’ என. படம் முடியும்போது சூர்யாவின் சொற்களே நினைவுக்கு வருகின்றன. உண்மையில், காட்சிக்குக் காட்சி கடந்த சென்று காலங்களின் நினைவேக்கம் மிகத் தீவிரமான உணர்ச்சிகளுடன் மோதும்போது எழும் அமைதியை கிளைமேக்ஸ் வரை உணர முடிகிறது. வணிக வெற்றிக்கு அப்பாற்பட்டு, நமக்கான நினைவுகளை சில மணி நேரம் மீட்டு புன்னகையுடன் திரும்பும் நல்ல படமாகவே உருவாகியிருக்கிறது மெய்யழகன்!

Related posts

Namakkal police have been arrested Kerala ATM robbers and one killed in police encounter.

UP: BJP Leader Princy Chauhan Accuses Toll Employee Of Misbehaviour; Stages Protest

‘Will Get Married For Such Gifts’: Netizens React To Couple Presented With Coldplay Tickets On Wedding Day; Video Viral