பஹ்ரைச்,
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் மஹசி துணை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், பொதுமக்கள் சில நாட்களாக தூக்கம் இழந்து தவித்து வருகின்றனர். அந்த பகுதியில் சுற்றி வரும் ஓநாய் கூட்டம் ஒன்று திடீரென இரவில், ஊருக்குள் புகுந்து வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளை, வாயில் கவ்வி கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடி விடுகிறது.
இதுவரை 8 குழந்தைகள் ஓநாய் கூட்ட தாக்குதலுக்கு பலியாகி உள்ளன. பெண் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். இதனால், 45 நாட்களில் மொத்தம் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, அந்த பகுதி மக்கள் பாதுகாப்பை மேற்கொள்வதற்கான வழிகளை தங்கள் கைகளில் எடுத்து கொண்டனர். இதுபற்றி எம்.எல்.ஏ. சுரேஷ்வர் சிங் கையில் துப்பாக்கி ஒன்றை ஏந்தியபடி கூறும்போது, வனவிலங்கு தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, மக்கள் இரவு நேரத்தில் ரோந்து செல்ல தொடங்கியிருக்கின்றனர் என கூறியுள்ளார்.
இதுவரை 3 ஓநாய்கள் பிடிபட்டு உள்ளன. வன துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார். அவற்றை கண்டறிவதற்காக, கேமிராவுடன் கூடிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், ஓநாய் கூட்டத்தின் தாக்குதல் தொடருவது அந்த பகுதி மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.