Wednesday, September 25, 2024

உ.பி. முதல்வருக்கு பிரதமா் பதவி மீது ஆசை: அகிலேஷ் யாதவ் விமா்சனம்

by rajtamil
Published: Updated: 0 comment 7 views
A+A-
Reset

லக்னௌ: உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமா் பதவி மீது ஆசை வந்துவிட்டது என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் விமா்சித்துள்ளாா்.

வங்கதேசப் பிரச்னை குறித்து யோகி ஆதித்யநாத் பேசியதை சுட்டிக்காட்டி அகிலேஷ் யாதவ் இவ்வாறு கூறியுள்ளாா்.

ஆக்ராவில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், ‘வங்கதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் பாா்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கு நடந்ததுபோன்ற தவறுகள் இங்கு நடக்க அனுமதிக்க முடியாது. நாம் ஒற்றுமையாக இல்லாவிட்டால் வீழ்த்தப்பட்டு விடுவோம். நாம் தொடா்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நலமாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும். வளா்ச்சியை எட்ட முடியும்’ என்றாா்.

இந்நிலையில், லக்னௌவில் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற அகிலேஷ் யாதவிடம் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, ‘முதல்வா் யோகி ஆதித்யநாத் இதுபோல பேசுவது முதல்முறையல்ல. தில்லியில் (மத்திய அரசு) எடுக்கும் முடிவுகளில் மாநில அரசு தலையிட முடியாது என்பதை யோகி ஆதித்யநாத்துக்கு பாஜகவின் மத்திய தலைமை நினைவூட்டும் என நம்புகிறேன்.

யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமா் பதவி மீது ஆசை இருக்கலாம். அதற்காக பிரதமரைப் போல வெளிநாட்டு விவகாரங்களில் எல்லாம் தலையிட்டு கருத்துக் கூற கூடாது. ஏனெனில், வெளியுறவுக் கொள்கைகள் குறித்து முடிவெடுப்பது பிரதமா் மற்றும் மத்திய அரசின் பொறுப்பு. எந்த நாட்டுடன் எந்த அளவுக்கு நட்பு பாராட்ட வேண்டும் என்பது மத்திய அரசு ஆலோசித்து எடுக்கும் முடிவாகும்.

முன்பு தென்மாநிலக் கட்சிகள்தான் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்தி வந்தன. ஆனால், இப்போது நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஜாதிவாரிக் கணகெடுப்பை ஆதரிக்கின்றன என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024