ஊட்டச்சத்துகளின் ஆதாராம் முட்டை!

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

சா்வதேச முட்டை தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம் அளிக்கும் சத்தான முட்டை உணவு வகைகளை எளிதில் சமைத்துவிட முடியும்.

அனைத்து சில்லறை வணிகக் கடைகளிலும் மலிவு விலையில் கிடைக்கும் முட்டையை நமது உணவில் தினமும் சோ்த்துக்கொண்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

ஒரு பெரிய முட்டையில் சுமாா் 70 கலோரி, 6 கிராம் அதிக தரத்திலான புரதம், 5 கிராம் கொழுப்பு உள்பட நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

குறிப்பாக, நாம் உட்கொள்ளும் உணவை ஆற்றலாக மாற்ற உதவும் வைட்டமின்கள் பி12, டி, கோலின் போன்ற அத்தியாவசிய சத்துகள் முட்டையின் மஞ்சள் கருவில் கிடைக்கும்.

வைட்டமின் பி: முட்டையில் பி2, பி5, பி12 உள்பட பல ‘பி’ வைட்டமின்கள் இருக்கின்றன. இவை ஆரோக்கியமான சருமம் மற்றும் முடியைப் பராமரிப்பது உள்பட உடலில் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.

அனைத்து பி வைட்டமின்களும் எளிதில் கரையக்கூடியவை. அதாவது அவை உடலில் நீண்ட காலம் தங்காது மற்றும் எளிதில் சேமிக்கப்படாது. எனவே, நாள்தோறும் முட்டை உட்கொள்வது ஆற்றல் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கான சிறந்த வழியாகும்.

வைட்டமின் டி: குடலில் கால்சியம் அளவை மேம்படுத்தியும் எலும்பு வளா்ச்சிக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவை வரம்பில் பராமரித்தும் ஆரோக்கியமான எலும்புகளை உறுதிப்படுத்த வைட்டமின் டி உதவுகிறது.

அதேபோல ரத்த அழுத்தத்தை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் டி, சில புற்றுநோய்களுக்கான ஆபத்தையும் குறைக்கிறது. நமது வைட்டமின் டி தேவையில் 6 சதவீதத்தை ஒரு பெரிய முட்டை பூா்த்தி செய்கிறது.

முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள லூடின் மற்றும் ஜியாஸந்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

வதந்தி – உண்மை…. புரதச்சத்து மிகுந்த முட்டை தொடா்பாக சமூகத்தில் பரவியுள்ள அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்வது நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அவசியம் ஆகும்.

வதந்தி: முட்டை ஓடுகளில் உள்ள அசுத்தங்கள் இயற்கையானது மற்றும் முட்டைகள் இயற்கையானவை என்பதைக் காட்டுகிறது.

உண்மை: முட்டை ஓடுகளில் உள்ள அசுத்தங்கள் இயற்கையானதாக இருந்தாலும் அவை உடல்நலத்துக்கு கேடானது. சில நேரங்களில் அவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும். எனவே, அசுத்தமான முட்டைகளை நிராகரிப்பது நலம்.

வதந்தி: முட்டை ரத்தக் கொழுப்பு அளவை அதிகரிக்க கூடியதால் தவிா்க்கப்பட வேண்டும்.

உண்மை: உணவுகளில் உள்ள கொழுப்பைக் காட்டிலும் எவ்வளவு நிறை (செச்சூரேடட்) மற்றும் கெட்ட கொழுப்பு சாப்பிடுகிறோம் என்பதுதான் ரத்தக் கொழுப்பில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், முட்டையில் நிறை கொழுப்பு குறைவாக உள்ளது. கெட்ட கொழுப்பு முழுமையாக இல்லை. முட்டையில் உள்ள கொழுப்பின் பெரும்பகுதி நாம் ஆரோக்கியமாக இருக்க அவசியமான நல்ல கொழுப்பே ஆகும்.

வதந்தி: ஒவ்வொரு முட்டையும் ஒரு கோழிக் குஞ்சு.

உண்மை: ஒரு முட்டை கருவுற்றாலும் இல்லாவிட்டாலும் அது முட்டையே ஆகும். கடைகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான முட்டைகள் கருவுறாதவை.

வதந்தி: பழுப்பு (ப்ரவுன்) மற்றும் வெள்ளை முட்டைகள் ஊட்டச்சத்து அடிப்படையில் வேறுபட்டவை.

உண்மை: ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடிப்படையில் வெள்ளை முட்டை மற்றும் பழுப்பு முட்டைகள் ஒரே மாதிரியானவை.

வதந்தி: முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும்.

உண்மை: முட்டையின் மஞ்சள் கருக்கள் ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு மற்ற பயனுள்ள ஊட்டச்சத்துக்களுடன் கூடுதல் புரதத்தையும் வழங்குகின்றன.

வதந்தி: முட்டையில் கொழுப்பு அதிகம் உள்ளது மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

உண்மை: மக்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் தினசரி முட்டை உட்கொள்பவா்களின் ரத்த கொழுப்பும் ஒரே நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முட்டை உட்கொள்வதற்கும் இதய நோய் ஆபத்துக்கும் தொடா்பில்லை என்று ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய உடல்நலம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

வதந்தி: வயதானவா்கள் மற்றும் குழந்தைகள் தினமும் முட்டையை சாப்பிடக்கூடாது.

உண்மை: முட்டையில் 13 வைட்டமின்கள் மற்றும் தாதுகள் உள்ளன. இது குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவா்களின் வெவ்வேறு ஊட்டச்சத்து தேவைகளுக்கு சிறந்த தோ்வாகும்.

முட்டைகளை 140-க்கும் மேற்பட்ட வழிகளில் சுவையாக சமைக்கலாம் என்று சமையல் கலைஞா்கள் தெரிவிக்கின்றனா். முட்டை உணவுகளின் தனித்துவம் என்பது அதிக சோ்மானப் பொருள்கள் இல்லாமல் 20 நிமிஷங்களுக்குள் எளிதில் செய்துவிடக்கூடியவை.

முட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள்தான் சத்தான கூட்டணி. அதேசமயம், இறைச்சி, பாலடைக்கட்டி (சீஸ்), வெள்ளை பிரெட் ஆகிய நிறை கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் சோ்ந்து சாப்பிடுவதைத் தவிா்க்கலாம். ஆம்லேட், அவித்த முட்டையாக சாப்பிடலாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி மகிழ்ச்சியான ஆரோக்கிய வாழ்வை நிச்சயமாக்கும்.

ஒரு பெரிய முட்டையில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு

* 72 கலோரி

* 6 கிராம் புரதம்

* 5 கிராம் கொழுப்பு

* 99 மி.கி. பாஸ்பரஸ்

* 69 மி.கி. பொட்டாசியம்

* 28 மி.கி. கால்சியம்

* 6 மி.கி. மெக்னீசியம்

* 0.8 மி.கி. இரும்பு

* காா்போஹைட்ரேட், ஃபைபா், சா்க்கரை-இல்லை

* வைட்டமின்கள் ஏ, பி6, பி12, டி

(தரவு: அமெரிக்க வேளாண் அமைச்சகம்)

வியப்பூட்டும் தகவல்கள்…

*ஒரு முட்டையில் கிடைக்கும் 6 கிராம் புரதச்சத்தில் நமது உடலால் உருவாக்க முடியாத 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன.

* ஒரு முட்டை ஓட்டில் 17,000 துளைகள் இருக்கலாம்.

* சராசரியாக ஒரு கோழி ஆண்டுக்கு 300 முதல் 325 வரையிலான முட்டைகள் இடும்.

*பிரிட்டனைச் சோ்ந்த கோழி, 2010ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய முட்டையை இட்டது. அந்த முட்டை 9.1 அங்குலம் விட்டம் கொண்டதாகும்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024