எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பிரச்சினைகளை உருவாக்கும் கவர்னர்கள் – பா.ஜனதா மீது கார்கே தாக்கு

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் அம்மாநில கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து ஆபிரகாம் அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

இதனிடையே நான் எந்த தவறும் செய்யவில்லை. ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் கவர்னர் அளித்துள்ள சட்டவிரோத ஒப்புதல் என்பதால் கோர்ட்டில் சட்ட ரீதியாக போராடுவேன். எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோர் மீது நாங்கள் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்குப்பதிய அனுமதி தரப்பட்டுள்ளது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியிருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பிரச்சினையை உருவாக்க பா.ஜனதா கவர்னர்களை நியமித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கவர்னர் அனுப்பிய நோட்டீசில் என்ன உள்ளது? என்பதை பார்க்கவில்லை. அதுபோல் என்ன காரணத்திற்காக அனுமதி அளித்தார் என்பது குறித்து நான் இன்னும் விசாரிக்கவில்லை. என்னால் தற்போது நோட்டீஸ் சரியா அல்லது தவறா? என கூற முடியாது. ஆனால் ஒருவிசயம் என்னவென்றால், மேற்குவங்காளம், கர்நாடகா, தமிழ்நாடு அல்லது வேறு எங்கெல்லாம் பா.ஜனதா அல்லாத அரசு ஆளும் மாநிலங்களில் கவர்னர்களை நியமித்துள்ளதோ, அங்கெல்லாம் அவர்கள் அதிகப்பட்டியான இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர். வழக்கின் முழு விவரம், வழக்கறிஞர் ஆலோசனைக்குப் பிறகு இது தொடர்பாக பதில் அளிப்பேன்" என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024