‘எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசியதில்லை’ – மோடியை விமர்சித்த மன்மோகன் சிங்

by rajtamil
0 comment 33 views
A+A-
Reset

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பஞ்சாப் வாக்காளர்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெறும் உரையாடல்களை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இதில் மோடி முற்றிலும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலான, கொடூரமான வெறுப்பு பேச்சுகளை பேசியிருக்கிறார். பொது உரையாடலின் கண்ணியத்தையும், பிரதமர் பதவியின் மாண்பையும் சீர்குலைத்த முதல் பிரதமர் நரேந்திர மோடிதான்.

கடந்த காலத்தில் எந்தவொரு பிரதமரும் சமூகத்தின் ஒரு பிரிவினரையோ அல்லது எதிர்கட்சிகளையோ குறிவைத்து இதுபோன்ற மோசமான, வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசியதில்லை. மேலும் என்னைப் பற்றியும் சில பொய்யான கருத்துகளை அவர் கூறியிருக்கிறார். நான் எனது வாழ்நாளில் எந்தவொரு சமூகத்தையும் தனித்துப் பார்த்ததில்லை. அது பா.ஜ.க.விற்கே சொந்தமான குணமாகும்.

'அக்னிவீர்' திட்டம் என்பது பா.ஜ.க.வால் மிகவும் மோசமான முறையில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். தாய்நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்கள், 'அக்னிவீர்' திட்டத்தால் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த திட்டம் ஒழிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது.

டெல்லியின் எல்லையில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 750 விவசாயிகள் போராட்டத்தின்போது தங்கள் உயிரை இழந்தனர். அவர்கள் காவல்துறையின் லத்தி மற்றும் ரப்பர் புல்லட்டுகளால் தாக்கப்பட்டது மட்டுமின்றி, பிரதமர் மோடியின் மோசமான அவதூறுகளாலும் தாக்கப்பட்டனர். விவசாய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைக்காக மட்டுமே அவர்கள் போராட்டம் நடத்தினர்.

பஞ்சாப் மக்களின் தியாக உணர்வை அனைவரும் அறிவார்கள். இந்த தேர்தல், இந்தியாவில் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடத்துடிக்கும் ஆட்சியிடம் இருந்து நமது நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பதற்கான கடைசி வாய்ப்பாகும்."

இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024