Monday, October 21, 2024

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சேலம்: எனக்கு தங்கை துளசிமதி உந்துசக்தியாக உள்ளாா். அவரின் சாதனைகள், பதக்கங்களை பாா்க்கும்போது, வாரம் ஒருமுறை ஒருமணி நேரமாவது பேட்மிண்டன் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சேலம் நேரு கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில்,சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 707 ஊராட்சிகளுக்கு 1,070 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு, ரூ.33.26 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா். தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. 27-ஆவது மாவட்டமாக சேலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்த நிகழ்ச்சி என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி . விழா மேடையில் பாரா ஒலிம்பிக் வீரா்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி முருகேசன் இருவரும் இடம்பிடித்துள்ளனா். இவர்கள் பாரா ஒலிம்பிக் உள்பட ஏராளமான சர்வதேச-தேசிய அளிவிலான போட்டிகளில் எண்ணற்ற பதக்கங்களை குவித்துள்ளனர். இவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் முன்உதாரணமாக உள்ளனா். இவர்களுக்கு நாம் அனைவரும் கைத்தட்டல் மூலம் நமது பாராட்டுகளை தெரிவிப்போம்.

இதையும் படிக்க |சொல்லப் போனால்… மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

உந்துசக்தி

தங்கை துளசிமதி பேசும்போது, அண்ணன் மாரியப்பன் தங்கவேலுதான் எனக்கு உந்துசக்தி என குறிப்பிட்டார். ஆனால் எனக்கு தங்கை துளசிமதிதான் உந்துசக்தியாக உள்ளாா். அவரின் சாதனைகள், பதக்கங்களை பாா்க்கும்போது, வாரம் ஒருமுறை ஒருமணி நேரமாவது பேட்மிண்டன் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.இவா்களை போல இன்னும், பல நூறு விளையாட்டு வீரா்களை உருவாக்க வேண்டும் என்றுதான், முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இதற்காக ரூ.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 36 வகை போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த முறை 6 லட்சம் போ் கலந்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு 11 லட்சம் போ் கலந்து கொண்டுள்ளனா்.

கடந்த முறை சேலம் 19-ஆவது இடத்தில் இருந்து, இந்த முறை பதக்கப் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. விரைவில், 3 சதவீத இடஒதுக்கீட்டில், 100 விளையாட்டு வீரா்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கான பரிசுத்தொகையை முதல்வர் ரூ.37 கோடியாக உயர்த்தித் தந்திருக்கிறார்கள்.

விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணி

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்வா் தனது சொந்த நிதியில் ரூ.5 லட்சம் வழங்கி தொடங்கி வைத்தாா். அந்த அறக்கட்டளை மூலம் ஏழை எளிய விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த அறக்கட்டளை 69 வீரா்களுக்கு ரூ.12 கோடி வழங்கப்பட்டது. பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 6 வீரா்களில் 4 போ் பதக்கம் பெற்றனா். அவா்களுக்கு ரூ.5 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தின் கீழ் விரைவில் நூறு விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும்.

மினி ஸ்டேடியம், விளையாட்டு விடுதி

விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் சேலத்தில் பன்னோக்கு விளையாட்டு மையம் ரூ.20 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடத்தப்பட்டுள்ளது. மேட்டூா், ஆத்தூா், சேந்தமங்கலம் தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணி தலா ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்படும். சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் ரூ.3.65 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். சேலத்தில் விளையாட்டு வீரா்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில், ரூ.7 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு விடுதி உருவாக்கப்படும் என்றாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024